Enable Javscript for better performance
294 மதுக்கூடங்களை ஏலம் எடுக்க ஆளில்லை: வைப்புத் தொகை உயர்வால் ஏலதாரர்கள் புறக்கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    294 மதுக்கூடங்களை ஏலம் எடுக்க ஆளில்லை: வைப்புத் தொகை உயர்வால் ஏலதாரர்கள் புறக்கணிப்பு

    By DIN  |   Published on : 30th November 2017 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டாஸ்மாக் மதுக்கூட ஏலத்திற்கான வைப்புத் தொகை உயர்த்தப்பட்டதால் அனைத்து ஏலதாரர்களும் ஏலம் எடுக்காமல் புறக்கணித்தனர். 
    திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் செயல்பட்டு வரும் மதுக்கூடங்களுக்கான ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. 
    இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் 194 மதுக்கூடங்களுக்கு திருமழிசை சிட்கோவில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகத்திலும் , மேற்கு மாவட்டத்தில் 103 மதுக்கூடங்களுக்கு காக்களூர் சிட்கோவில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்திலும் ஏலம் நடைபெற்றது. 
    அப்போது, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியதால், அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புக்குப் போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். 
    இந்த ஏலத்தில் பங்கேற்க, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏலதாரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில், ஒவ்வொரு மதுபானக் கடைகளில் விற்பனையாகும் தொகைக்கேற்ப 3 சதவீதம் வைப்புத்தொகையைச் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
    இந்த வைப்புத் தொகை அறிவிப்புக்கு ஏலதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எப்போதும் போல் 2 சதவீத அளவிலேயே வைப்புத் தொகை செலுத்த அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் 
    கேட்டனர். 
    இதற்கு அதிகாரிகள் மறுத்ததால், வெறும் 4 மதுக்கூடங்களுக்கு மட்டும் 8 பேர் விண்ணப்பித்தனர். மீதமுள்ள 294 மதுக்கூடங்களை ஏலம் கேட்க யாரும் முன்
    வரவில்லை. இதனால், ஒரே நாளில் ஏலம் முடிந்துவிடும் என நினைத்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
    இதுகுறித்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட மண்டல அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், இதற்கு முன்பு வரையில், ஒரு மதுபானக் கடையின் ஒரு நாள் விற்பனையை ஒரு மாதத்திற்குக் கணக்கிட்டு அதில் 2 சதவீதத்தை வைப்புத் தொகையாக செலுத்தி வந்தனர். 
    தற்போது இதில் ஒரு சதவீதம் அதிகரித்து 3 சதவீதமாக வைப்புத் தொகை செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 
    ஆனால், கூடுதல் வைப்புத் தொகையை குறைக்கும்படி ஏலதாரர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இந்த ஏலம் அரசு அறிவிக்கும் மற்றொரு நாளில் மீண்டும் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai