திருவள்ளூர் அருகே சாலை தடுப்பில் வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், மட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர்(31). இவரது மனைவி மகாலட்சுமி(28), இவர்களது மகன் ஜோகேஷ்(6), உறவினர் சுமதி(37) ஆகிய 4 பேரும் திண்டுக்கல்லில் இருந்து கடந்த 3 நாள்களுக்கு முன்பு திருப்பதிக்கு வந்தனர்.
திருப்பதியில் சுவாமி தரிசனம் முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சென்னையில் உள்ள உறவினர்களைப் பார்ப்பதற்காக திருவள்ளூர் வழியாக காரில் புறப்பட்டுச் சென்றனர். காரை சுதாகர் ஓட்டி வந்தார்.
இந்நிலையில், திருவள்ளூருக்கும் திருமழிசைக்கும் இடையே உள்ள ஆன்டர்சன்பேட்டை அருகே வந்தபோது, கார் நிலை தடுமாறி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், அந்த வாகனத்தில் பயணம் செய்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வெள்ளவேடு போலீஸார் காயம் அடைந்தவர்களை உடனே மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சுதாகரின் மனைவி மகாலட்சுமி உயிரிழந்தார்.
சுதாகர், அவரது மகன் ஜோகேஷ், சுமதி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சுதாகரின் உறவினரான செந்தில்குமார் வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.