மாவட்டத்தில் கருணாநிதி செயல்படுத்திய திட்டங்கள்

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவு, திருவள்ளூர் மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூரில்  1995- ஆம்  ஆண்டு  நடைபெற்ற  பொதுக் கூட்டத்தில் பேசிய  முன்னாள்  முதல்வர்  கருணாநிதி. (வலது) கருணாநிதியின்  வேண்டுகோளை  ஏற்று  சத்ய சாய்  அறக்கட்டளை  சார்பில்  சீரமைக்கப்பட்ட  கால்வாய்
திருவள்ளூரில்  1995- ஆம்  ஆண்டு  நடைபெற்ற  பொதுக் கூட்டத்தில் பேசிய  முன்னாள்  முதல்வர்  கருணாநிதி. (வலது) கருணாநிதியின்  வேண்டுகோளை  ஏற்று  சத்ய சாய்  அறக்கட்டளை  சார்பில்  சீரமைக்கப்பட்ட  கால்வாய்
Published on
Updated on
2 min read


திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவு, திருவள்ளூர் மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இம்மாவட்டத்தில், அவர் நிகழ்த்திய உரைகள், செயல்படுத்திய திட்டங்கள் ஆகியவை மக்களுக்கு நினைவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1983-இல் திருவள்ளூர் கலைச்சங்க மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்காக மின் ஒளி அலங்காரத்தில் தேர் பறப்பது போல் அமைக்கப்பட்டிருந்தது. தொலைவில் இருந்து பார்க்கும் போது தேர் ஓடுவது போல் தெரிகிறது. ஆனால், அருகில் சென்று பார்த்தால் அங்கே நின்ற படியே இருக்கும். அதேபோல் தான் 
எம்.ஜி.ஆர். ஆட்சியில், நலத் திட்ட உதவிகள் ஏழை, எளிய பொதுமக்களுக்கு சென்றடையாமல் ஒரே இடத்தில் நிற்பதாக குறிப்பிட்டுப் பேசினார். 
அதைத் தொடர்ந்து 1984-இல் திருவள்ளூர் நகர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். இதுவரையில் ஒரு சிலருக்கு மட்டுமே பொதுமக்கள் வாய்ப்பு கொடுத்தீர்கள். இந்த முறை திமுகவில் உள்ள 3 ரத்தினங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். அப்போதைய தேர்தலில் திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக முனிரத்தினம், பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக ராஜரத்தினம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி வேட்பாளராக நாகரத்தினம் ஆகியோரைக் குறிப்பிட்டே 3 ரத்தினங்கள் எனக் குறிப்பிட்டுப் பேசியது கட்சியினரிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. ஆனால், அந்தத் தேர்தலில் 3 பேருமே தோல்வியைத் தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
அதேபோல், 1984-இல் தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் (டெசோ) அமைப்பு ஏற்படுத்துவது தொடர்பாக சென்னையில் முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து அன்றே மாலையில் முதல் முறையாக திருவள்ளூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும் தெலுங்கு கங்கை குடிநீர் திட்டத்துக்கான கால்வாய் தோண்டும் பணிகள் 1983-இல் தொடங்கி, 1996-இல் நிறைவு செய்யப்பட்டது. இந்தக் கால்வாய்கள் நிறைவு பெற்றதை ஒட்டி தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டில் கல்வெட்டுடன் கூடிய நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு, அப்போதைய முதல்வர்களாக இருந்த கருணாநிதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டுகளில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தந்தார். மேலும், 1995-இல் திமுக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, இளைஞர்களைக் கவரும் வகையில் பேசினார். 
ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து திருவள்ளூரை பிரித்து தனி மாவட்டமாக அறிவித்து பொதுமக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்றார். பின்னர், 1997-இல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதையடுத்து, 1999-ஆம் ஆண்டு ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தையும் தொடங்கி வைத்தார். 1996-இல் திருத்தணி அருகே சமத்துவபுரமும், 2006-இல் மப்பேடு அருகே சமத்துவபுரத்தையும் தொடங்கி வைத்து, ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் குடியமர்த்தினார். 2006-இல் நிலம் இல்லாதோருக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். 
அதையடுத்து 2008-இல் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றிருந்த தமிழக அரசின் வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பம்மாத்துகுளத்திலும் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து 2006-இல் காட்டுப்பாக்கத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தவர், என்பதால் அவரது இழப்பு திமுக தொண்டர்களிடையே நீங்காத நினைவுகளை ஏற்படுத்தியுள்ளன. அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு
திருவள்ளூர் அருகே இரவில் மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில் அரசு நகரப் பேருந்தின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. 
திருவள்ளூர் பணிமனையிலிருந்து திருவள்ளூர்-கனகம்மாசத்திரம் கிராமத்துக்கு டி.20 என்ற தடம் எண் கொண்ட அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்து, செவ்வாய்க்கிழமை இரவு கனகம்மாசத்திரத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கொழுந்தலூர் அருகே வந்தபோது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிவிட்டு அருகில் உள்ள கரும்புக் காட்டுக்குள் ஓடி மறைந்தனர். இந்தத் தாக்குதலில் அரசு நகரப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.