திருவள்ளூர் அருகே நீர் நிலை புறம்போக்கு இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரூ.11.20 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் அருகே உள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தில் நீர் நிலை புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகள் அமைத்துள்ளதாகவும், மழை நீர் செல்ல வழியில்லாத நிலையில் கிராமத்திற்குள் புகும் சூழ்நிலையிருப்பதாகவும் அப்பகுதி மக்களிடம் இருந்து ஆட்சியர் எ.சுந்தரவல்லிக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அம்மணம்பாக்கம் கிராமத்தில் குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வட்டாட்சியர் தமிழ்செல்வனுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அக்கிராமத்தில் உள்ள நீர் நிலை புறம்போக்கு இடங்களில் வரைபட உதவியுடன் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நீர் நிலை புறம்போக்கு இடமான மொத்த பரப்பளவு 13.27 ஹெக்டேர் ஆகும். இதில் 11 ஏக்கர் வரையில் வீடுகள் அமைத்தும், விளைநிலமாகவும் ஆக்கிரமித்திருந்தது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, 16 ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.
மேலும், அதே கிராமத்தில் இருந்து, சென்னை மாநகராட்சி பகுதிக்குச் செல்லும் கால்வாயில் 1.15 ஹெக்டேர் புறம்போக்கில் அமைக்கப்பட்டிருந்த 6 குடிசைகளும் அகற்றப்பட்டு 20 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.11.20 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.