தனியார் பேருந்து உரிமையாளர்களின் நலனுக்காக அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்வு:  டி.டி.வி.தினகரன்

தனியார் பேருந்து உரிமையாளர்களின் நலனுக்காகவே அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். 

தனியார் பேருந்து உரிமையாளர்களின் நலனுக்காகவே அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக டி.டி.வி.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். 
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த டி.டி.வி .தினகரன் ஆதரவாளர்கள் சார்பில், பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து புதன்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. 
இக்கூட்டத்திற்கு (தகுதி நீக்கம் செய்யப்பட்ட) பூந்தமல்லி எம்எல்ஏ ஏழுமலை தலைமை வகித்தார். திருவேற்காடு சீனிவாசன் முன்னிலை வகித்தார். 
இதில், ஆர்.கே. நகர் எம்எல்ஏ டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசியது: அரசுப் பேருந்துகளில் ஒரே இரவில் 60 சதவீதம் வரையில் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். 
இதற்கு முன்பு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்த போது பொதுமக்களுக்கு பொற்கால ஆட்சியை கொடுத்தனர். பேருந்துக் கட்டண உயர்வால் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள்  யாரும் பாதிக்கக் கூடாது என்பதற்காக சிறிய அளவிலேயே அவர்கள் கட்டணத்தை உயர்த்தினர். ஆனால், இப்போதைய அரசின் 60 சதவீத கட்டண உயர்வால் ஏழை எளிய மக்கள் பேருந்துகளில் செல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்
பட்டுள்ளனர். 
தமிழகத்தில் 8 பேருந்துக் கோட்டங்கள் மூலம் மொத்தம் 27 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள் லாபத்தில் இயங்கும் நிலையில், அரசுப் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகின்றனர். ஆனால், கொங்கு மண்டலத்தில் தனியாருக்கு கூடுதலாக போக்குவரத்து வழித்தடங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. 
தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்றே பயணச்சீட்டு கட்டணம் உயர்த்தியதாக பொதுமக்களிடையே பேச்சு எழுந்து வருகிறது. 
மேலும், ஜெயலலிதா எதிர்த்த, பல திட்டங்கள் தமிழகத்தில் மத்திய அரசால் அமல்படுத்தப்படுகின்றன. இன்னும் சில வாரங்களில் நீட் தேர்வு வரஇருக்கிறது. இதற்காக பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் செயல்படாமலே இருக்கிறது. அதேபோல் காவிரி, பெரியாறு மற்றும் விவசாயிகள் பிரச்னைகளையும், கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் அளிக்க வேண்டிய ரூ.2 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தரவும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 
இதுபோன்ற பொதுப் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் மத்திய அரசின் நிழல் ஆட்சிதான் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த அரசு விரைவில் அகற்றப்படும். பொதுமக்கள் எதிர்பார்த்த ஜெயலலிதா ஆட்சி விரைவில் அமையும். 
உண்மையான அதிமுக தொண்டர்கள் 90 சதவீதம் பேர் எங்கள் பக்கம் உள்ளனர். எனவே ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் நோக்கத்தில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கிராமங்கள் தோறும் பிப்.2-ஆம் தேதி முதல் பொதுமக்களை நேரடியாக சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
இதில், திருவள்ளூர் இளங்கோவன், கடம்பத்தூர் ஆர். வினோத்குமார், பூந்தமல்லி சங்கர், திருமழிசை எம்.கர்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com