Enable Javscript for better performance
கரும்பு சாகுபடியில் அதிக லாபம் பெற புதிய திட்டம் அறிமுகம் : ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    கரும்பு சாகுபடியில் அதிக லாபம் பெற புதிய திட்டம் அறிமுகம் : ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 09th February 2018 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேளாண்மைத் துறை சார்பாக 'நீடித்த நிலையான கரும்பு சாகுபடி முறை'யை ஆட்சியர் எ.சுந்தரவல்லி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
    திருத்தணி வட்டம், கனகம்மாசத்திரம் கிராமத்தில் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி திட்டத்தினை தொடங்கி வைத்த ஆட்சியர் விவசாயிகளுக்கு கரும்புக் கன்றுகளை வழங்கினார்.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக உற்பத்தியை இரண்டு மடங்கு உயர்த்தி, மும்மடங்கு வருமானத்தை அடைய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
    அந்த வகையில் கரும்பு உற்பத்தியைப் பெருக்கி லாபம் பெற ஏதுவாக அரசு 'நீடித்த நிலையான கரும்பு சாகுபடி முறை'யை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் திருவள்ளுர் மாவட்டத்தில் 310 ஹெக்டேர் நிலத்தில் கரும்பு சாகுபடிக்கு இலக்கு நிர்ணயித்து ரூ.380 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
    இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் மானியமும், இதர விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் மானியமும் வழங்கி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் வாயிலாக சொட்டு நீர்ப் பாசன அமைப்புகள் நிறுவித் தரப்படுகிறது.
    இதில், ஒரு விதைப்பரு சீவல்களிலிருந்து நாற்றங்கால் அமைத்து இளம் நாற்றுகளை (25-35 நாள்கள் வயதான) எடுத்து நடவு செய்ய ஏதுவாக 31 நிழல் வலை குடில்கள் அமைக்கப்படும்.
    தொடர்ந்து, ஒரு நிழல்வலை குடிலில் இருந்து ரூ. 1.5 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படும்.
    இதற்காக, திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலமாக விவசாயிகளை தேர்வு செய்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
    நீடித்த நிலையான கரும்பு சாகுபடி முறையினால் தண்ணீர் உபயோகத்திறன் கூடுகிறது. சொட்டுநீர்ப் பாசன அமைப்பு மூலம் சரிவிகித அளவு உரங்களை உபயோகிப்பதால், பயிர்களுக்கு சிறப்பான ஊட்டச்சத்து கிடைக்கிறது.
    மேலும், காற்று மற்றும் சூரியஒளி அதிக அளவில் பயிர்களுக்கு கிடைப்பதால் கரும்பில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் விவசாயிகளின் மொத்த சாகுபடி செலவு குறைந்து மகசூல் 150 சதவீதம் அதிகமாகிறது என்றார் அவர்.
    இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் குணசேகரன், துணை இயக்குநர் எபினேசர், கோட்டாட்சியர் ஜெயராமன், உதவி இயக்குநர் ராமு, வட்டாட்சியர் நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து
    கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai