Enable Javscript for better performance
கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை: ஆட்சியரிடம் இந்து முன்னணியினர் மனு- Dinamani

சுடச்சுட

    

    கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை: ஆட்சியரிடம் இந்து முன்னணியினர் மனு

    By DIN  |   Published on : 09th February 2018 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளை மீறி செயல்படும் கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.
    கண்டன ஆர்ப்பாட்டம்... முன்னதாக, வடாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாகத்தினரைக் கண்டித்து, இந்து முன்னணியினர் திருத்தணி கமலா தியேட்டர் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இக்கோயிலில் புதியதாக வழியை ஏற்படுத்த ஆகம விதிகளை மீறி, கோயிலின் தெற்குப் பகுதியில் சுற்றுச்சுவரை இடித்து புதிய வழி ஏற்படுத்தியதால் தான் ஸ்தல விருட்சம் தீப்பிடித்து எரிந்தது என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆட்சியரிடம் மனு... இதைத்தொடர்ந்து, திருவள்ளூர் மேற்கு மாவட்டத் தலைவர் வினோத்கண்ணா, முன்னாள் எம்எல்ஏ ரகுராஜ் ஆகியோர் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், புராதன சிறப்பு வாய்ந்த தலமாகும். இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டுக்கு கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கோயிலின் சுற்றுச்சுவரை இடித்ததோடு, தெற்குப் பகுதியில் அறநிலையத்துறை நிர்வாகிகள் புதிய நுழைவு வாயிலை ஏற்படுத்தி பக்தர்களிடம் கட்டணம் வசூலித்தனர்.
    இதுபோன்ற பழைமை வாய்ந்த கோயிலின் சுற்றுச்சுவரை இடிக்க அறநிலையத்துறைக்கு அதிகாரம் கிடையாது. அதேசமயம், இதற்கு தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் ஆகும். எனவே, இதற்குக் காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர். நிகழ்வில், திருவாலங்காடு ஒன்றியச் செயலாளர் தணிகைவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai