Enable Javscript for better performance
தீயில் கருகிய வடாரண்யேஸ்வரர் கோயில் ஸ்தல விருட்சம் : ஆகம விதி மீறலே காரணம்- Dinamani

சுடச்சுட

  

  தீயில் கருகிய வடாரண்யேஸ்வரர் கோயில் ஸ்தல விருட்சம் : ஆகம விதி மீறலே காரணம்

  By DIN  |   Published on : 09th February 2018 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் ஸ்தல விருட்சம் தீப்பிடித்து எரிந்ததற்கு, கோயில் நிர்வாகம் ஆகம விதிகளை மீறியதே காரணம் என எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் குற்றம் சாட்டினார்.
  திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், நடராஜரின் ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தின சபையாக விளங்குகிறது. இக்கோயிலில் நடராஜர் ஊர்த்துவ தாண்டவ முத்திரையுடன் தனது பாதத்தை செங்குத்தாக தூக்கிய நிலையில், எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறார். இக்கோயில் வளாகத்தில் ஸ்தல விருட்சமான ஆலமரம் உள்ளது. இந்த மரம், மிகவும் பழைமை வாய்ந்தது.
  இந்த விருட்சத்தின் கீழ் தான் ஆண்டுதோறும் நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். இந்த விருட்சம் நான்கில் மூன்று பங்கு உலர்ந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு மர்மமான முறையில் விருட்சம் தீப்பிடித்து எரிந்தது.
  இதைக் கண்ட கோயில் ஊழியர்கள் திருவள்ளூர் மற்றும் பேரம்பாக்கம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
  அதற்குள், விருட்சத்தின் பெரும் பகுதி தீயில் கருகியது. தகவல் அறிந்ததும், புதன்கிழமை இரவு ஆட்சியர் சுந்தரவல்லி, வட்டாட்சியர் நரசிம்மன் ஆகியோர் நிகழ்விடத்துக்கு வந்து, தீயில் கருகிய விருட்சத்தை பார்வையிட்டனர்.
  இதையடுத்து, கோயில் குருக்கள் சபா ரத்தினம் வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு விருட்சம் எரிந்ததற்கான பரிகார பூஜைகளை நடத்தினார். பின்னர், வழக்கம் போல் கோயில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது.
  சிசிடிவி கேமராவில்... இதுகுறித்து, கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், இணை ஆணையர் செ. சிவாஜி ஆகியோர் கூறியது: ஸ்தல விருட்சம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானக் காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆலமரத்தடியில் சில சிறுவர்கள் துணிகளைக் கொளுத்தி விளையாடிக் கொண்டிருந்ததும், பல பக்தர்கள் மரத்தடியில் கற்பூரம் ஏற்றியதும் தெரியவந்தது.
  மேற்கண்ட இரு சம்பவத்தால்தான் ஆலமரம் தீப்பிடித்து எரிந்துள்ளது. தற்போது, ஆலமரத்தின் ஒரு கிளை மட்டும் நன்றாக உள்ளது. சமீப காலமாக விருட்சம் உலர்ந்து வருவதை அறிந்து, அதே இடத்தில் கடந்த ஆண்டு வேறு ஒரு மரக்கன்று நட்டு வைத்துள்ளோம். அதைச்சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்படும் என்றனர்.
  பக்தர்கள் புகார்... சிவபக்தர்கள் சிலர் கூறும்போது, கடந்த ஆண்டு கோயில் நிர்வாகத்தினர் இந்த ஸ்தல விருட்சத்தின் அருகே உள்ள சுற்றுச் சுவரை 5 அடி அகலத்திற்கு இடித்து, புதிய வழியை ஏற்படுத்தினர். இந்த சுற்றுச் சுவரை இடித்ததற்காக பரிகார பூஜைகள் செய்திருக்க வேண்டும். ஆனால், கோயில் நிர்வாகம் செய்யவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே கோயிலில் ஆகம விதிகளை பின்பற்றுவது இல்லை.
  இதனால் தான் ஸ்தல விருட்சம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இனிவரும் காலங்களில் ஆகம விதிகளை பின்பற்ற வேண்டும் என்றனர்.
  சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்... வியாழக்கிழமை நிகழ்விடத்துக்கு வந்து, விருட்சத்தைப் பார்வையிட்ட திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன் கூறும்போது, பிரசித்தி பெற்ற இக்கோயிலை முறையாக பராமரிக்க வேண்டும். ஆனால், இங்கு ஒரே ஒரு குருக்கள் மட்டுமே பணிபுரிவதால் பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். ஆகமவிதிகளை மீறி கோயிலின் சுற்றுச்சுவரை இடித்து புதிய வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயில்களைப் பராமரிக்க அரசு போதிய நிதி அளிக்கவில்லை என கூறி கோயிலில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. இக்கோயிலைப் பாதுகாக்க சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவேன் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai