Enable Javscript for better performance
மின் இணைப்புக்கு லஞ்சம்: ஆய்வாளருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    மின் இணைப்புக்கு லஞ்சம்: ஆய்வாளருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை

    By DIN  |   Published on : 09th February 2018 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மின்வாரிய ஆய்வாளருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
    சென்னை, பாடியில் உள்ள சீனிவாசா நகரைச் சேர்ந்த யேசுதாஸ் மகன் ஜான் கிறிஸ்டோபர்(32). இவர் சென்னை ஜே.ஜே.நகரில் புதிய தொழிற்சாலை நடத்துவதற்காக மின் இணைப்பு பெற கடந்த 12.12.2005 இல் மின்வாரிய அலுவலகத்தில் பகுதி ஆய்வாளராக இருந்த சரவணகுமாரை அணுகியுள்ளார்.
    இதற்கு வைப்புத் தொகையாக ரூ.10,250 செலுத்த வேண்டும் என்றும், மேலும் தனக்கு உடனடியாக ரூ.3,750 -ம், அதையடுத்து 3 நாள்களில் 5 ஆயிரமும் அளிக்க வேண்டும் என சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
    இதைத்தொடர்ந்து, ஜான் கிறிஸ்டோபர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகம், சென்னை மாநகரம்-1 இல் புகார் செய்தார் . அதன் பேரில் கடந்த 20.12.2005 இல் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனையின்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.14 ஆயிரத்தை ஜான் கிறிஸ்டோபர் சரவணகுமாரிடம் நேரில் அளித்துள்ளார். அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சரவணகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    இந்நிலையில் இறுதி கட்ட விசாரணை நீதிபதி சாந்தி முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் குற்றம் நிருபிக்கப்பட்டதால் மின்வாரிய ஆய்வாளர் சரவணகுமாருக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதோடு, அபராதத்தை செலுத்தவில்லை என்றால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக அமுதா ஆஜரானார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai