Enable Javscript for better performance
தமிழக ஆளுநர் இன்று திருவள்ளூர் வருகை: ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளிக்க சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக ஆளுநர் இன்று திருவள்ளூர் வருகை: ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளிக்க சிறப்பு முகாம்

    By DIN  |   Published on : 31st March 2018 08:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்வதற்காக சனிக்கிழமை (மார்ச் 31) வருகை தரவுள்ளார். இதையொட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து 260 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
    திருவள்ளூர் மாவட்டத்திற்கு சனிக்கிழமை (மார்ச் 31) வருகை தரும் ஆளுநர், கூடப்பாக்கத்தில் செயல்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்,  அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டுவரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், திருவள்ளூரில் உள்ள நவீன எரிவாயு தகன மேடை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து, திருத்தணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பழங்குடியினர் சமூக சங்கமம் அமைப்பினர் மற்றும் மாணவர்களுடன் ஆளுநர் கலந்துரையாடல்  நடைபெறவுள்ளது. 
    பின்னர், மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சி அரங்குகளைப் பார்வையிடுகிறார். இதையடுத்து, அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று, அதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். இதையொட்டி, ஆளுநரிடம் மனுக்களை அளிப்போருக்கு முன்கூட்டியே அனுமதிச் சீட்டு அளிக்கவும்  ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
    முகாமில், பொதுமக்கள் நீண்ட நாளாகத் தீர்க்கப்படாத தங்களின் பிரச்னைகள் குறித்தும், அரசால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பல
    தரப்பட்ட மனுக்களை அளித்தனர். 
    இதில், தற்போது அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதில் விதிமுறை மீறல் நடைபெற்றது குறித்தும், ஏழைகளுக்கு வேலை தராமல், பணம் பெற்றுக்கொண்டு  தகுதியில்லாதவர்களை தேர்வு செய்திருப்பதாகவும், இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் 90 க்கும் மேற்பட்டோர் மனுக்களை அளித்தனர். மேலும் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 170 மனுக்கள் உள்பட மொத்தம் 260 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
    இதுகுறித்து திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த சரோஜா கூறுகையில், கடந்த 2014-ம் ஆண்டு எனது மகன் விபத்தில் கழுத்து எலும்பு முறிவு ஏற்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது, தவறான அறுவை சிகிச்சை செய்ததால் படுத்த படுக்கையாக இருந்தார். 
    அதையடுத்து, 2016-இல் மீண்டும் அரசு பொது மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் எவ்விதப் பயனும் இல்லை. இதற்காக இழப்பீடு கேட்டு அரசு பொது மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது நிலுவையில் உள்ளது. பாதிக்கப்பட்ட  எனது மகனுக்கு நிதி உதவிக்கு ஏற்பாடு செய்யக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai