Enable Javscript for better performance
அடுத்தடுத்து 3 வீடுகளில் 18 சவரன் நகை, ரொக்கம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் 18 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுபோன்ற தொடர் திருட்டுச் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து  வருகின்றனர். 
    இதுகுறித்து மப்பேடு போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் மாசானமுத்து(45). இவர் திருவள்ளூர் அருகே உள்ள தொடுகாடு கிராமத்தில் ஓம் சக்தி நகரில் தங்கி, தனியார் கல்லூரியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம் போல் புதன்கிழமை பணிக்குச் சென்றதும், அவரது மனைவியும் உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். 
    பின்னர், மாலையில் இருவரும் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதைத் தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 18 சவரன் நகைகள் மற்றும் எல்.இ.டி. டிவி, இரண்டு செல்லிடப்பேசிகள் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. 
    இதேபோல், அதே பகுதியில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும், கேரளாவைச் சேர்ந்த தீபக் என்பவரது வீட்டில் ரூ.7,500 பணமும், மேலும் மற்றொரு வீட்டில் வசித்து வரும், நாமக்கல்லைச் சேர்ந்த கனகராஜ் என்ற லாரி ஓட்டுநரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2,500 ரொக்கத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. 
    இது குறித்து மப்பேடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
    இதுபோன்று அடுத்தடுத்த வீடுகளில் நடந்த தொடர் திருட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் போலீஸார் இரவு நேரங்களில் ரோந்து செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai