Enable Javscript for better performance
செங்குன்றம் பகுதிகளில் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    செங்குன்றம் பகுதிகளில் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி

    By DIN  |   Published on : 18th May 2018 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fire

    சாலையை மறைக்கும் புகை மண்டலத்தின் இடையே பயணிக்கும் வாகனஓட்டிகள்.

    மாதவரம், செங்குன்றம், பாடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை எரிப்பதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
    சென்னை மாதவரம் - வடபெரும்பாக்கம் - கிராண்ட்லைன் பகுதியில் உள்ள மாதவரம் நெடுஞ்சாலையில், குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு வந்து சாலையோரமாக உள்ள காலி நிலங்களில் கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகள், மலைபோல் குவிந்து வருகின்றன. 
    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. 
    மாறாக, அந்த குப்பைக்கழிவுகளை தீயிட்டு எரித்து விடுகின்றனர். தீ பலநாள்களாக எரிந்து புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. இதில், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் சாப்பிட முடியாமலும், தூங்க முடியாமலும் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல் நாரவாரிக்குப்பம், பாடியநல்லூர் ஊராட்சி, கிராண்ட்லைன் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து குப்பைகளை எரித்து வருகின்றனர். 
    இதே நிலை நீடித்தால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் என அஞ்சுகின்றனர். 
    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், குப்பைகள் கொட்டுவதற்கு இடம் இல்லை. மேலும் குப்பைகளை அள்ளுவதற்கு போதிய ஊழியர்கள் இல்லை. குப்பைகளை அள்ளும் வாகனங்களும், கழிவுநீர் அகற்றும் வாகனங்களும் இல்லை. ஊழியர்களுக்கு தேவையான ஊதியம் இல்லை. மேலும் இது போன்ற குறைகள் நிறைந்து இருப்பதால் அதிகாரிகள் என்ன செய்ய முடியும்? இப்பிரச்னையில், பொதுமக்களின் தொடர் அழுத்தம் காரணமாக குப்பைகளை அகற்றாமல் தீயிட்டு எரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி வெளியில் இருந்து குப்பைக் கழிவுகளை மர்ம நபர்கள் வாகனங்களில் கொண்டுவந்து கொட்டிச் செல்கின்றனர். அதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்குள் மற்ற பகுதிகளில் குப்பைகளை கொட்டி விடுகின்றனர். 
    இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் போதாது. பொதுமக்களின் ஆதரவும் தேவை. குப்பைகளை கொண்டு வந்து கொட்டும் நபர்களை பொதுமக்களே தட்டிக் கேட்க வேண்டும். மேலும் குப்பைகளை எரிப்பவர்களைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என தெரிவித்தார். 
    இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதற்கும், எரிப்பதற்கும் அதிகாரிகளின் உத்தரவு இல்லாமல் யாரும் செய்யமுடியாது. 
    இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பிரச்னையில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இதே நிலை நீடித்தால், பொதுமக்களுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்தார். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai