Enable Javscript for better performance
திருத்தணியில் 13 வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி வருவாய்க் கோட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை வியாழக்கிழமை ஆய்வு செய்த மோட்டார் போக்குவரத்துத் துறை மற்றும் உயர்நிலைக் குழுவினர் 13 வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
    தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவுரையின்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் தமிழ்நாடு பள்ளி வாகன சிறப்பு விதிகளின்படி பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
    இதில், திருத்தணி வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள 33 தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான 154 வாகனங்களை ஆய்வுக்காக திருத்தணி அரசு கலைக்கல்லூரி எதிரில் உள்ள மைதானத்துக்கு வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கொண்டுவரும்படி ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
    அந்த வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெய்பாஸ்கர், வாகன தணிக்கைக்குழு உறுப்பினர்களான திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், கோட்டாட்சியர் பவணந்தி, டி.எஸ்.பி. சேகர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 
    அப்போது, பள்ளி வாகனங்களின் அவசரக் காலக்கதவு, டயர், பிரேக், முதலுதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, தீயணைப்புக் கருவிகள், ஓட்டுநர்களின் கண் பார்வை, உடல் தகுதி, உதவியாளர் நிலை உள்ளிட்ட 16 பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
    இதுகுறித்து திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் கூறும்போது, இந்த ஆய்வில் திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுக்காவில் உள்ள கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், அத்திமஞ்சேரிப்பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து 154 வாகனங்கள் ஆய்வுக்கு வந்திருந்தன.  இதில், 141 வாகனங்களை தர ஆய்வு செய்து, தகுதிச் சான்றுகள் வழங்கப்பட்டன. தகுதியில்லாத 13 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இவை மீண்டும் தகுதியான ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு மீண்டும் ஆய்வு செய்யப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai