Enable Javscript for better performance
திருத்தணி முருகன் கோயில்: தலைமுடி, பிரசாதக் கடைகள் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி முருகன் கோயில்: தலைமுடி, பிரசாதக் கடைகள் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 18th May 2018 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி மற்றும் பிரசாத விற்பனைக் கடைகளை ஏலம் எடுப்பதற்கு வியாழக்கிழமை யாரும் முன்வராததால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்துச் செல்கின்றனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி, மலைக்கோயிலில் உள்ள பிரசாதக் கடை,  உப்பு, மிளகுக் கடை, வில்வம், தும்பைப் பூ, மலர்மாலை மற்றும் அர்ச்சனைப் பொருள்கள் விற்பனை உள்பட மொத்தம் 12 கடைகள் மலைக்கோயிலில் உள்ளன.
    இதுதவிர,  திருத்தணி - அரக்கோணம் சாலையில் காட்ரோடு எதிரில் 22 கடைகளும், சந்நிதி தெருவில் 27 கடைகளும், ம.பொ.சி.சாலையில் 22 கடைகளும் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கடைகள் ஆண்டுக்கு ஒரு முறை கோயில் நிர்வாகத்தால் பொதுஏலம் விடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2018-19 ஆம் ஆண்டிற்காக ஏலம் விடும் நிகழ்வு கோயில் தலைமை அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி நடந்தது.
    இந்த ஏலத்தில் பிரசாதக் கடைகள் மற்றும் தலைமுடி ஆகியவற்றை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. 
    இதையடுத்து, இரண்டாவது முறையாக கோயில் தலைமை அலுவலகத்தில் கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் செ. சிவாஜி, வேலூர் இணை ஆணையர் அசோக்குமார், திருவள்ளூர் உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில் வியாழக்கிழமை 
    (மே 17) ஏலம் நடைபெற்றது. 
    இந்த ஏலம் விடும் தேதி, கோயிலின் அறிவிப்புப் பலகை மற்றும் நாளிதழிலும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ஏலம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், மலைக்கோயிலில் உள்ள கடைகளை ஏலம் எடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இதனால் இரண்டாவது முறையாக ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
    காரணம், கோயில் நிர்வாகம் தலைமுடிக்கு 2.02 கோடி ரூபாயும், பிரசாதக் கடைகளுக்கு 1.56 கோடி ரூபாயும் ஏலத் தொகையாக நிர்ணயம் செய்திருந்தது. இந்த ஏலத் தொகை மிக அதிகம் என்பதால், ஏலத்தை எடுக்க யாரும் முன்வரவில்லை என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai