Enable Javscript for better performance
"பள்ளி வாகனங்களில் குறைபாடு இருந்தால் உரிமம் ரத்து'- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் உடனே நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்; ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அந்த வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். 
    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தும் மாணவ, மாணவிகள் பயணிக்கும் வகையில் பாதுகாப்பாக உள்ளதா என அந்தந்தப் பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
    இம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்களாக மொத்தம் 1,222 வாகனங்கள் இயங்குகின்றன. இந்த வாகனங்களில் அரசு விதிமுறை பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து வருவாய்த் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர், காவல் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை ஆகிய துறை அலுவலர்கள் குழு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 
    அதன் அடிப்படையில் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, ஆட்சியர் எ.சுந்தரவல்லி அதிகாரிகளுடன் சென்று ஒவ்வொரு வாகனத்திலும் அரசு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். 
    இதில் குறிப்பாக, பேருந்தின் படிக்கட்டுகள் குழந்தைகள் ஏறும் அளவில் அமைக்கப்பட்டுள்ளனவா, தீயணைப்புக் கருவிகள் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் பார்வையிட்டார். அதையடுத்து, விபத்து மற்றும் ஆபத்தான நேரங்களில் வெளியே செல்லும் வகையில் அவசர வழிக்கான கதவுகள் சரியாக இயங்குகிறதா, முதலுதவிப் பெட்டி மற்றும் வெளியே கை நீட்ட முடியாத அளவுக்கு பாதுகாப்பான முறையில் ஜன்னல் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்
    கொண்டார். 
    பின்னர் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒவ்வொரு பள்ளி வாகனமும் முறையாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். அரசு விதிமுறைகளைப் பின்பற்றி வாகனத்தின் அமைப்பு இருக்க வேண்டும். அதேபோல், அனுபவம் உள்ள ஓட்டுநர்களை நியமனம் செய்திருக்க வேண்டும். பள்ளி பேருந்து நல்ல முறையில் இயங்குகிறதா என ஆய்வு செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சான்றிதழ் அளித்த பின்னரே அந்தப் பேருந்தை சாலையில் இயக்க வேண்டும். இந்த ஆய்வின் போது ஏதாவது குறைபாடுகள் கண்டறிந்தால் மே 31-ஆம் தேதிக்குள் அவற்றை சீரமைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்த வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். 
    திருவள்ளூர் மாவட்டத்தில் 243 பள்ளிகளில் உள்ள 1,222 பேருந்துகளையும் ஆய்வு செய்து உரிமம் புதுப்பித்து இயக்க வேண்டும். இல்லையேல் குழந்தைகளை பேருந்தில் ஏற்றுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும். அதேபோல், பள்ளி வாகனங்களை வேகமாக ஓட்டினாலோ அல்லது மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
    இதன் அடிப்படையில், திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உள்பட்ட 252 பேருந்துகளும், திருத்தணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உள்பட்ட 179 பேருந்துகளும் ஆய்வு செய்யப்பட்ட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
     இந்த ஆய்வில், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai