Enable Javscript for better performance
மணல் குவாரி: சாலையோர வீடுகளில் புழுதி படிவதால் பொதுமக்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மணல் குவாரி: சாலையோர வீடுகளில் புழுதி படிவதால் பொதுமக்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே மணல் குவாரி லாரிகளால் சாலையோரக் குடியிருப்புகளில் அதிக அளவில் புழுதி படிவதால் குழந்தைகள் நோய் பாதிப்பால் அவதிக்குள்ளாகி வருவதாகக் கூறி சாலையில் தடுப்புகளை வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் மேம்பால வேலைகள் நடைபெற்று வருவதால் துணைச்சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அச்சாலையோர வீடுகளுக்குள் தூசி படிவதால், இரவு நேரங்களில் தூங்க முடியாமல் குழந்தைகள் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
    இந்நிலையில் திருவள்ளூர் அருகே வேப்பஞ்செட்டி மற்றும் கூவம் ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்தக் குவாரிகளில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் கடம்பத்தூர் ரயில் நிலையத்தைக் கடந்து இவ்வழியாகச் செல்கின்றன. 
    அதேபோல், ஏற்கெனவே ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குவாரிகளில் இருந்து மணல் ஏற்றி வரும் லாரிகள் அடிக்கடி செல்வதால் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்லும்போது சாலையோர வீடுகள் முழுவதிலும் தூசி படிகிறது. இதனால் குழந்தைகளும், பெரியவர்களும் சுவாசிக்க முடியாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். அதோடு குடிநீரிலும், உணவுப் பொருள்களிலும் தூசி படிந்து வீணாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 
    இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாலைகள் சீரமைக்கப்படாததோடு, மணல் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பவும் அவர்கள் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி பொதுமக்கள் ரயில்வே கேட் அருகே சாலையில் பெரிய பாறாங்கற்களைப் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கடம்பத்தூர் போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் 
    ஈடுபட்டனர். 
    மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியதைத்
    தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
    எனினும், சாலையை சீரமைக்கவும், மணல் லாரிகளை மாற்றுப் பாதையில் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai