Enable Javscript for better performance
ரூ.137 கோடியில் அதிநவீன சோதனைச் சாவடி: அமைச்சர்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் ரூ.137 கோடியே 18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கணினிமயமாக்கப்பட்ட அதிநவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
    தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியான கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே ஏழுகிணறு பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடி உருவாக்கப்படும் என்று கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் சாலையிலும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் சாலையிலும் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. 
    இச்சாவடியில், போக்குவரத்துத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை,  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகிய 7 துறைகளை சேர்ந்த அலுவலகக் கட்டடங்கள் ரூ.137 கோடியே 18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டன. 
    மேலும், இச்சாவடியில் நவீன எடை மேடைகள், வாகனங்கள் அதிக அளவில் நிற்பதற்கான நிறுத்தங்கள், கிடங்கு வசதிகள், சோதனைச் சாவடி நிலையங்கள், சாலை குறியீட்டுப் பலகைகள் மற்றும் நவீன மின்சார மற்றும் மின்னணு சாதனங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இச்சோதனைச் சாவடி முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.
    இச்சாவடி விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் இங்கு வியாழக்கிழமை வந்தனர். சோதனைச்சாவடி செயல்படும் முறை, வாகனங்களை ஆய்வு செய்யும் முறை ஆகியவற்றை அவர்கள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, இங்கு உருவாக்கப்பட்டுள்ள அனைத்து அலுவலகங்களையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். 
    மேலும் வாகனங்களை சோதனைச் சாவடியில் நுழையச் செய்து, கணினிமயமாக்கப்பட்ட அமைப்பின் மூலம் சோதனை செய்யும் முறையையும் நேரில் பார்வையிட்டனர். மேலும் சோதனைச்சாவடி கட்டுப்பாட்டு அறையையும் பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.
    அப்போது தமிழக உள்துறைச் செயலாளரும், போக்குவரத்துத் துறை செயலாளருமான நிரஞ்சன் மார்டி, போக்குவரத்துத் துறை ஆணையர் சமயமூர்த்தி,  செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சம்பத்குமார் ஆகியோர் சோதனைச் சாவடி செயல்படும் முறையினை எடுத்துரைத்தனர். 
    அதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
    இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி மூலம் இனி அண்டை மாநிலங்களுக்கு தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்வதைத் தடுத்தல், அத்தியாவசியப் பொருள்களைக் கடத்துவதைத் தடுத்தல், சமூக விரோதச் செயல்களை எளிதில் தடுத்தல், தமிழக எல்லைப் பகுதிகளைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கு தற்காலிக அனுமதிச் சீட்டு வழங்குதல் மற்றும் அதற்கான கட்டணத்தை வசூலித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ள முடியும். 
    பல துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் சோதனைச் சாவடியாக இந்தச் சாவடி உள்ள நிலையில், அதிக வாகனங்கள் குறைவான நேரத்தில் கையாளப்படுவதோடு, வாகனங்கள் அதிக நேரம் காத்து நிற்பதும் தவிர்க்கப்படும். இது மட்டுமல்லாமல் பொருள்கள் குறிப்பிட்ட இடத்திற்கு விரைவில் சென்றடையவும் வழிவகை ஏற்படும். மேலும், அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படுவதால் சமூக விரோதச் செயல்களுக்கு இனி இடமில்லை என்றார் அவர்.
    கும்மிடிப்பூண்டியில் பேருந்து பணிமனை அமைக்கும் பணி 5 ஆண்டுகளாக முடங்கிக் கிடப்பது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து அவர்  கூறியது:
    தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது 110ஆவது விதியின் கீழ் தமிழகத்தில் 70 பணிமனைகள் அமைக்கப்படும் என்று பேரவையில் அறிவித்தார். தற்போது 54 பணிமனைகள் அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில், விரைவில் கும்மிடிப்பூண்டியில் பேருந்துப் பணிமனை அமைக்கப்படும். மேலும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.1000 கோடி ஊதிய உயர்வு நிலுவைத் தொகையுடன் வழங்கப்பட்டு போக்குவரத்துத் தொழிலாளர் ஊதியப் பிரச்னையை தமிழக அரசு சரிசெய்தது. தமிழகத்தில் காலாவதியான பேருந்துகளை திரும்பப் பெறும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 5,000 புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு அறிவித்துள்ளார்.
    மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் வரை, சீருடை அணிந்த மாணவ, மாணவியர்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்க ஓட்டுநர்களும் நடத்துநர்களும் அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாகப் பயணிக்க பேருந்துகளில் படிக்கட்டுகள் தாழ்வாகவும், தானியங்கிக் கதவுகளும் உள்ள பேருந்துகள் அதிகமாக பயன்பாட்டில் விடப்பட்டுள்ளன என்றார் அவர்.
    இந்த ஆய்வின்போது, பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, கோட்டாட்சியர் முத்துசாமி, வட்டாட்சியர் 
    ஆர்.எஸ்.ராஜகோபால், அதிமுக ஒன்றியச் செயலாளர் கோபால் நாயுடு ஆகியோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai