சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க வலியுறுத்தல்

திருவள்ளூர் அருகே டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து வீடு, வீடாக ஆய்வு செய்ததோடு, தெருக்களில்

திருவள்ளூர் அருகே டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து வீடு, வீடாக ஆய்வு செய்ததோடு, தெருக்களில் சேதமடைந்த நிலையில் உள்ள குடிநீர் குழாய்கள் அனைத்தையும் சரிசெய்யவும் அதிகாரிகளிடம் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வலியுறுத்தினார். 
திருவள்ளூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆட்சியர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த நெய்வேலி கிராமத்தில் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். 
இதையடுத்து, ஒவ்வொரு வீடுகள் தோறும் சென்று டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் டயர் போன்ற பொருள்கள் வைத்துள்ளார்களா, சுற்றுப்புறமும் சுகாதாரமாக உள்ளதா என பார்வையிட்டார். பின்னர் குடிநீர் தொட்டியில் டெங்கு கொசுக்கள் உள்ளனவா என ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதியில் இருந்த மாணவ, மாணவிகளிடம் டெங்கு காய்ச்சல் குறித்து கேள்விகள் கேட்டறிந்ததோடு சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு எழுதுகோல் பரிசாக 
வழங்கினார்.
இதைத் தொடர்ந்து,  குடிதண்ணீரில் குளோரின் அளவை கருவி மூலம் சரிபார்த்தார். அச்சமயம், அந்தப் பகுதியில் சேதமடைந்து உடைந்து நீர் ஒழுகிக் கொண்டிருந்த குடிநீர் குழாய்களை உடனே மாற்றி சரிசெய்யவும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.         
பின்னர் வரும் வழியில் சதுரங்கபேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள மேல்நிலைத் தொட்டி மற்றும் சுகாதார வளாகங்களைப் பார்வையிட்டார். அங்கு பணியிலிருந்த துப்புரவு பணியாளர்களை அழைத்து,  நாள்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். கட்டாயம் கையுறை அணிந்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 
அதைத் தொடர்ந்து டெங்கு கொசு உற்பத்தியாகக் கூடிய வகையில் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுகாதாரக் கேடாக வைத்திருந்தால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். அப்போது, அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நிலவேம்பு குடிநீரையும் அவர் 
வழங்கினார். 
நிகழ்வில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணராஜ், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், துணை வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com