கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தேர்தலில் அதிமுகவினர் பெரும்பான்மை

திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இயக்குநர்களுக்காக நடைபெற்ற தேர்தலில்

திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இயக்குநர்களுக்காக நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 17 இயக்குநர்களில், 13 இயக்குநர்களாக அதிமுகவினர் வெற்றி பெற்றனர்.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு மொத்தம் 17 இயக்குநர்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர், இவர்களில் ஒருவர் நிர்வாகக் குழு தலைவராகத் தேர்வு செய்யப்படுவார். 
இந்நிலையில், புதிய இயக்குநர்களுக்கான தேர்தல் கடந்த 12 -ஆம் தேதி நடைபெற்றது. இதில், 6 பெண்கள் உள்பட மொத்தம் 86 பேர்  போட்டியிட்டனர். இத்தேர்தலில், மொத்தமுள்ள 32,289 உறுப்பினர்களில் 4,752 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் உள்ள கிடங்கில் தொடங்கியது. தேர்தல் அலுவலர் குணசேகரன் தலைமையில், மொத்தம் 40 ஊழியர்கள் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 9 சுற்றுகள் என தீர்மானிக்கப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், அ.தி.மு.க. சார்பில் சரசா, பத்மாவதி, ஜாக்னலி, தர்மன், ஜெய்சங்கர், சக்திவேல், பொன்னுரங்கம், ஆனந்தன், ராமமூர்த்தி, குப்பன், நவாஸ்அகமது, லோகையன், சத்தியமூர்த்தி என 13 பேரும், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், லலிதா, குமரேசன் ஆகிய 2 பேரும், தி.மு.க. சார்பில் எம்.கஸ்தூரி, பா.ம.க. சார்பில் பாலயோகி ஆகியோர் வெற்றி பெற்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற 17 இயக்குநர்களுக்கும் தேர்தல் அலுவலர் குணசேகரன் சான்றுகளை வழங்கினார்.
இதையடுத்து, அக்டோபர் 16 -ஆம் தேதி, நிர்வாகக் குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com