ஏரிக்கரை புறம்போக்கில் குடியிருப்போருக்கு மாற்று இடம்: மார்க்சிஸ்ட் கட்சியினர் கோரிக்கை

திருவள்ளூர் நகராட்சி, காக்களூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிக்கரை நீர்நிலை புறம்போக்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளை காலி செய்ய

திருவள்ளூர் நகராட்சி, காக்களூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிக்கரை நீர்நிலை புறம்போக்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளை காலி செய்ய வலியுறுத்தி பொதுப்பணித்துறையினர் நோட்டீஸ் வழங்கியதை திரும்ப பெற வேண்டும் என்றும், குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். 
திருவள்ளூர் நகராட்சிப் பேருந்து நிலையம் பின்பகுதி மற்றும் காக்களூர் ஏரிக்கரை நீர் நிலை புறம்போக்கு பகுதியை ஆக்கிரமித்து 300-க்கும் மேற்பட்ட வீடுகள் அமைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது. 
இக்குறிப்பிட்ட பகுதி நீர் வரத்திற்கு எவ்விதமான இடையூறும் இல்லாத பகுதி என்பதால் இந்த இடத்தில் கடந்த 40-ஆண்டுகளாக பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் அனைத்து குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மின்சாரம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட ஆவணங்களும் இந்த முகவரியிலேயே உள்ளது. இவர்கள் முறையாக வீட்டு வரியும் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
மேலும், இவர்களுக்கு விவசாய நிலங்களோ வேறு எந்தவிதமான சொத்துகளோ கிடையாது. தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பொதுமக்கள் ஒரு தலைமுறையை கடந்தும் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் தங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த வருவாய் மூலம்தான் குடியிருப்புகளை அமைத்துள்ளனர். இவர்களுக்கு இதைத் தவிர வேறு எந்த உடமைகளும் கிடையாது. 
இந்நிலையில், குடியிருப்புகளை அகற்றப்போவதாக திருவள்ளூர் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மூலம் கடந்த வாரம் அனைத்து  வீடுகளுக்கும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் 21 நாள் கால அவகாசம் வழங்கி, அதற்குள் குடியிருப்புகளை அகற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
இந்த நிலையில், இப்பகுதி மக்களை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோபால்,  மாநிலக் குழு உறுப்பினர் பா.சுந்தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகனா உள்ளிட்ட நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர். 
அப்போது, நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வாழும் மக்களின் வீடுகளை அகற்றும் போது, மாற்று ஏற்பாடாக அருகாமையில் அனைவருக்கும் குடியிருப்புக்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற நீதிமன்ற வழிகாட்டுதல்களை அதிகாரிகள் பின்பற்றவில்லை. எனவே இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் இதைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com