உள்ளூர்வாசிகளுக்கு வேலை வழங்காததே தொழிற்சாலைகள் இயங்கத் தடையாகிறது: அமைச்சர் கருப்பணன் பேச்சு

தொழிற்சாலைகளை நடத்தி வரும் நிறுவனங்கள் அவை செயல்படும் பகுதிகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு

தொழிற்சாலைகளை நடத்தி வரும் நிறுவனங்கள் அவை செயல்படும் பகுதிகளில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களை அரவணைத்துச் செல்லாமல் இருப்பதால்தான் அவை செயல்பட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளின் நிர்வாகிகள் - பொதுமக்கள் இடையேயான கலந்துரையாடல் கூட்டம் கும்மிடிப்பூண்டியில் செவ்வாய்க்
கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்தார். இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் கே.இளங்குமரன் வரவேற்றார். கோட்டாட்சியர் முத்துசாமி, வட்டாட்சியர் மதன்குப்புராஜ், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் சேகர் ஆகியோர் முன்னிலை 
வகித்தனர்.
கூட்டத்தில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பேசுகையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது, ஆட்சியாளர்கள் தரும் சிபாரிசு கடிதங்களுக்குப் பிறகும் கூட உள்ளூர் மக்களுக்கு வேலை தருவதில்லை என்றார்.
பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் பேசுகையில், தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் கவலை கொள்ளச் செய்கிறது என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் துளசி நாராயணன் பேசுகையில், சுற்றுச்
சூழல் சீர்கேட்டால், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பல்வேறு வியாதிகளால் அவதிப்படுகின்றனர். மக்களின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரத்தை அறிய மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்றார்.
 பொதுமக்கள் கூறுகையில், கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலைகளால் குடிநீர் மாசடைந்துள்ள நிலையில், இங்குள்ள அம்மா குடிநீர் தொழிற்சாலை மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படும் குடிநீரின் தரம் சந்தேகத்துக்குரியதாக உள்ளது, சித்தராஜகண்டிகை பகுதியில் நடமாடும் மருத்துவமனை வேண்டும், இப்பகுதியில் புதிய தொழிற்சாலைகளை அமைத்தால் அது மாசுக்களை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளாக மட்டும் இருக்கக் கூடாது என்றனர். தொடர்ந்து, சிப்காட் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கோ.ம.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மறுசுழற்சி செய்வதற்கான நவீன தொழில்நுட்ப இயந்திரத்தை வாங்குவதற்கு, அரசு மானியத்தை தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் பேசுகையில், வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகத்தை மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாத மாநிலம் என்ற நிலையை அடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேசியதாவது: தொழிற்சாலைகள் செயல்படும் பகுதியில் அவற்றின் உரிமையாளர்கள் அப்பகுதி மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுமக்களுடன் இணக்கமாக செயல்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து, அரவணைத்துச் செல்லும் தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்படும், பொதுமக்களை அரவணைத்துச் செல்லாத தொழிற்சாலைகளுக்கு எதிர்ப்பு வரும். இதற்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான மக்களின் போராட்டமே உதாரணம். 
கும்மிடிப்பூண்டியில் காற்று மாசின் தரத்தை அறியும் கருவி செயல்பட்டு வருகிறது. அதனை பொதுமக்கள் தினமும் நேரில் கண்டு ஆய்வு செய்யலாம்.
தொழிற்சாலை வளாகங்களில் நிர்வாகம் மரம் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும். கும்மிடிப்பூண்டியில் 1.75 கோடி ரூபாய் மதிப்பில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் அமைக்கப்படும் என்றார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எஸ்.ராஜன் நன்றி கூறினார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com