பிளாஸ்டிக்கில் தயாரான விநாயகர் சிலைகளுக்குத் தடை: பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் அருகே பிளாஸ்டிக்கில் தயாரான விநாயகர் சிலைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் தடைவிதித்த காரணத்தால், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்வதற்காக வந்த பொதுமக்கள்


திருவள்ளூர் அருகே பிளாஸ்டிக்கில் தயாரான விநாயகர் சிலைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் தடைவிதித்த காரணத்தால், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்வதற்காக வந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்-திருப்பதி சாலையில் திருப்பாச்சூர் சாலையோரத்தில் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த ஹரிதேஜாராம் தலைமையில் பலர் குடும்பம், குடும்பமாக விநாயகர் சிலைகளைத் தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் விநாயகர் சிலைகளை கடந்த 2 மாதங்களாக இரவும், பகலும் தயாரித்தனர்.
தற்போது, வர்ணங்கள் பூசிய நிலையில் பெரிய அளவிலான 80 சிலைகளை விற்பனைக்குத் தயாராக வைத்துள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை (செப்டம்பர் 13) விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்காக பொதுமக்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர்.
அதற்கு முன்னதாக, இங்கு தயாரான சிலைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அச்சிலைகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளதால் நீர் நிலைகளில் கரைக்கும் போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கூறி அதிகாரிகள் விற்பனைக்கு தடை விதித்தனர். இதனால், பல்வேறு கிராமங்களில் இருந்து சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு வாகனங்களில் வந்திருந்த பொதுமக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, திருவள்ளூர்-திருப்பதி சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, சிலைகளை ஆய்வு செய்து முடித்த பின்னர் எடுத்துச் செல்லலாம் எனவும், தற்போது சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை எடுத்துச் செல்லுமாறும் சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com