விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட நீர் நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்: ஆட்சியர்

திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமா


திருவள்ளூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, நீர் நிலைகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கொண்டாடவும் வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்ற கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை உபப் பொருள்கள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே தயார் செய்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களை உடைய விநாயகர் சிலைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதல் முறைகளின் படி கரைக்க அனுமதிக்கப்படும்.
அந்த வகையில் விநாயகர் சிலைகளை கரைக்க இம்மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நகர் ஏரி, கூவம் ஏரி, திருமழிசை குளம், ஊத்துக்கோட்டை குளம், சித்தேரி, கொசஸ்தலை ஆறு, காந்தி சாலை குளம், வண்ணான் குளம், கரீம் பீடி குளம், பண்டாரவேடு குளம், பராசக்தி நகர் குளம், கனகம்மா சத்திரம் குளம், ஏழு கண் பாலம், பக்கிங்காம் கால்வாய், புலிகாட் ஏரி, காக்களூர் ஏரி, திருவொற்றியூர் யூனிவேர்சல் கார்போரரெண்டம் (திருவொற்றியூர்) பின்புறம், பாப்புலர் எடைமேடை (திருவொற்றியூர்) பின்புறம் மற்றும் ராமகிருஷ்ணா நகர் (எண்ணூர்) ஆகிய இடங்கள் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காகக் கண்டறியப்பட்டுள்ளன.
எனவே அரசு விதிமுறைகளைப் பின்பற்றி எவ்வித பிரச்னையும் இல்லாமல் அமைதியாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமலும் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com