ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் இயக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே, ஆரம்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24-மணி நேரமும் இயக்கும்
ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் இயக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கும்மிடிப்பூண்டி அருகே, ஆரம்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24-மணி நேரமும் இயக்கும் வகையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள பூவாலை, தோக்கமூர், ஆரம்பாக்கம், எகுமதுரை ஆகிய நான்கு ஊராட்சிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் ஆரம்பாக்கத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், கூலித் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள் என சாதாரண மக்கள் சிகிச்சை பெறும் நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். அதுவும் பகல் 1 மணி வரை மட்டுமே அவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அதன்பிறகு வரும் நோயாளிகள் மருத்துவர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்கும் வகையில் இரு மருத்துவர்களை சுழற்சி முறையில் பணி அமர்த்த வேண்டும். மேலும், தனியாக 108 அவசர ஊர்தி வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் ஆரம்பாக்கம் கிளைச் செயலாளர் முகமது சாலி தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பினர்கள் டி.கோபாலகிருஷ்ணன்,
எம்.சி.சீனு, பா.லோகநாதன், வி.ஜோசப், பி.ஜே.எம்.மஸ்தான், நல்லம்மா சுபேதா ஆகியோர் கலந்துகொண்டனர். கபீர்பாஷா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com