ரூ.32.50 கோடியில் அம்மா திறன் வளர்ப்பு: பயிற்சித் திட்டம் மூலம் வேலை வாய்ப்புப் பயிற்சி

தகுதி குறைந்த, தொழில் திறனற்ற மற்றும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில்

தகுதி குறைந்த, தொழில் திறனற்ற மற்றும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அம்மா திறன் வளர்ப்பு பயிற்சித் திட்டம் சார்பில் சிறுகுறு தொழில் நிறுவனங்களில் பயிற்சி அளித்து வேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
மாநில அளவில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் திறனை வளர்த்தும் கொள்ளும் வகையில் திறன் வளர்ப்புப் பயிற்சிஅளிக்கும் திட்டம், தொழிற் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
அவ்வகையில் குறைந்த தகுதி பெற்ற இளைஞர்களுக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களில் அவர்கள் விரும்பும் தொழிலில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு பெறும் வகையில் அம்மா திறன் வளர்ப்பு பயிற்சித் திட்டமு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
அதாவது குறைந்த கல்வித் தகுதி, தொழில் திறனற்றோர், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அவரவர் விரும்பும்  தொழிலில் பயிற்சி அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்டத் தொழில் மையத்தின் உதவியுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிப்பதற்காக ஆண்டுதோறும் அரசு ரூ.32.50 கோடியை ஒதுக்கீடு செய்து வருகிறது. 
மாவட்டத் தொழில் மைய உதவியுடன் செயல்படும் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் இத்திட்டம் மூலம் 6 மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்படும். 
பல்வேறு தொழில்களைச் செய்வதற்காக மாவட்டத் தொழில் மையத்தை அணுகும் இளைஞர்களின் ஆர்வத்தைக் கண்டறிந்து விரும்பும் தொழிலில் சிறந்த பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இப்பயிற்சி முடிந்த பின் அந்த நிறுவனத்திலேயே தொழிலாளர்களாகத் தொடர வாய்ப்பு அளிக்கப்பட்டது. அல்லது சிறு, குறு தொழில் தொடங்குவதற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
இந்தப் பயிற்சியின்போது  இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக அரசு மாவட்டத் தொழில் மையம் மூலம் ரூ.2ஆயிரம், சிறு, குறு தொழில் நிறுவனம் சார்பில் ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.  
அந்த வகையில் இத்திட்டத்தின் மூலம் கடந்த 2016-17இல் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்து 20,150 பேருக்கும், 2017-18 இல் 13,365 இளைஞர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. 
அதேபோல், நிகழாண்டில் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு இலக்கு நிர்ணயித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.32.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இத்திட்டம் சிறு, குறு நிறுவனங்களில் செயல்படுத்தப்படுவதை மாவட்டத் தொழில் மைய அதிகாரிகள் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் கண்காணிப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com