விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்: போலீஸ் பாதுகாப்புடன் ஏரியில் கரைப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருவள்ளூர், சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகள் சனிக்கிழமை

விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருவள்ளூர், சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகள் சனிக்கிழமை மேளதாளத்துடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் (கரைப்பு) செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில், இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், 1,330 விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து 310}க்கும் மேற்பட்ட சிலைகள் விதிமுறைப்படி, அனுமதித்த வழித்தடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
இதில், திருவள்ளூர், திருப்பாச்சூர், வேப்பம்பட்டு, எடப்பாளையம், ஈக்காடு, மணவாளநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 130}க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு, ஆயில் மில் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன. இந்த ஊர்வல நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் மு.வினோத்கண்ணா தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் நா.ரவீந்திரன் விசர்ஜன உரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு சிறப்பு பூஜையுடன் ஊர்வலமாக புறப்பட்டது.
இந்த ஊர்வலம் ஜே.என். சாலை, பேருந்து நிலையம், வீரராகவர் கோயில் தேரடி, குளக்கரைச் சாலை, பஜார் வீதி, காக்களூர் சாலை வழியாக ஏரிக்குச் செல்லும் போது, வழியெங்கும் மேளதாளம் முழங்க, பக்தர்கள் ஆடல், பக்திப் பாடல்களுடன் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து காக்களூர் ஏரியில் பெரிய அளவிலான பள்ளம் தோண்டி தண்ணீர் நிரப்பி தயாராக இருந்த குளத்துக்குள் ஒவ்வொரு சிலையாக கரைத்தனர். நிகழ்ச்சியில், பாமக மாநில துணைப் பொதுசெயலாளர் பாலயோகி, பாஜகவைச் சேர்ந்த மேற்கு மாவட்டச் செயலாளர்
ஜே.லோகநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார், மாவட்டச் செயலர்கள் டி.பாலாஜி, ஆர்.கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் தில்லைநடராஜன் தலைமையில், 200}க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருத்தணியில்...
திருத்தணி, செப். 15: விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருத்தணி தாலுக்காவில் 92 விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். சனிக்கிழமை மூன்றாம் நாள் என்பதால் 40}க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாகக் கொண்டு சென்று, நீர் நிலைகளில் கரைத்தனர்.
திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு, சுப்புராயன் மேஸ்திரி தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை அப்பகுதி மக்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாகக் கொண்டு சென்று நந்தி ஆற்றில் கரைத்தனர். அதேபோல் எம்.ஜி.ஆர். தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளும் நந்தி ஆற்றில் கரைக்கப்பட்டன.
அதேபோல் திருத்தணியில் வைக்கப்பட்டிருந்த 40}க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு குளம் மற்றும் ஆற்றில் கரைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com