கரி மூட்டம் போடுவதில் ஆர்வத்துடன் ஈடுபடும் தொழிலாளர்கள்

ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கரியின் தேவை அதிகமாக இருப்பதாலும், குறைந்த செலவில் அதிக வருவாய் ஈட்டித் தரும் தொழிலாக கரி மூட்டம் போடும் தொழில் இருப்பதாலும்
கரி மூட்டம் போடுவதில் ஆர்வத்துடன் ஈடுபடும் தொழிலாளர்கள்

ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கரியின் தேவை அதிகமாக இருப்பதாலும், குறைந்த செலவில் அதிக வருவாய் ஈட்டித் தரும் தொழிலாக கரி மூட்டம் போடும் தொழில் இருப்பதாலும் திருவள்ளூர் பகுதியில் அதிகம் பேர் இதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 குறைந்த முதலீடு: திருவள்ளூர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்த படியாக மரக்கரி மூட்டம் போடும் தொழிலில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
 இதற்காக, இப்பகுதியில் உள்ள ராஜபாளையம், குஞ்சிதம், நெல்வாயல், மன்னவேடு, மேல்மனவேடு, சிற்றத்தூர், சிற்றம்பாக்கம், ஈக்காடு, கீழனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சீமைக்கருவேல மரங்களை விவசாயிகள் அதிக அளவில் வளர்த்து வருகின்றனர்.
 அதேபோல், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விறகுக்காக விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் சவுக்கு போன்ற மரங்களையே இத்தொழிலில் ஈடுபடுவோர் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற காரணங்களால் விவசாயிகள் மூலம் விறகுகள் கிடைப்பதால் கரிமூட்டம் போடும் தொழிலில் அதிகமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலில் 15 பேர் முதல் 20 பேர் கொண்ட குழுக்களாக தொழிலாளர்கள் இணைந்து ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
 பல்வேறு பயன்பாடுகள்: ஓட்டல்களில் எத்தனை வகையான மின் அடுப்புகள் வந்தாலும், பெரும்பாலும் எந்த நேரமும் பால் உள்ளிட்ட உணவுப் பண்டங்களை மிதமான சூடாக வைத்திருக்க மரக்கரியின் தேவை அவசியம் ஆகும்.
 அதேபோல், தந்தூரி வகைகள் தயார் செய்யவும் மரக்கரிகள் பயன்படுத்தப்படுவதால் இதன் தேவை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும், பாத்திரம் ஈயம் பூசுவோர், சலவை நிலையத்தில் இஸ்திரி பெட்டிக்கு பயன்படுத்துதல், மின்கலன் பேட்டரி செல் மற்றும் எர்த் கம்பிக்கு பயன்படுத்துதல் போன்றவற்றுக்கும் மரக்கரி உபயோகிக்கப்படுகிறது.
 வயிற்றுப் பிழைப்புக்காக...: இது குறித்து ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி கூறியதாவது:
 இப்பகுதியில் காய்ந்த சீமைக்கருவேல மரம், பட்டுப் போன நாட்டுக் கருவேல மரம் மற்றும் பல்வேறு வகையான மரங்களை விலைக்கு வாங்கி தொழிலாளர்கள் மூலம் 25 டன் முதல் 40 டன்கள் வரையில் வெட்டி வருவோம். இதில் வெட்டிய விறகுகளை 25 டன் வரையில் வாகனத்தில் கொண்டு வருவதற்கு ஏற்று, இறக்கு மற்றும் வெட்டுக் கூலியோடு ரூ.75 ஆயிரம் செலவு ஆகும்.
 இந்த விறகுகளை 40 நாள்கள் வரையில் நன்றாக காயவைத்து, அதை கூம்பு வடிவாக அடுக்கி, அதன் மேல் வைக்கோலை பரப்பிவிட்டு சேறு பூசி அடிப்பாகத்தில் துளையில் தீ வைத்து அந்த துளையை அடைத்து விடுவோம். இதில் புகை வெளியே வந்தால் விறகுகள் எரிந்து சாம்பலாகி விடும். இதனால், புகை வெளியே வராமல் 9 நாள்கள் வரை இரவு, பகலும் கண்விழித்துப் பாதுகாக்க வேண்டும். பின்னர், தண்ணீர் தெளித்து மரக்கரிகளை சேகரிக்க வேண்டும்.
 மரக்கரிக்கு தேவை அதிகமாக இருப்பதால் இப்பகுதியில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட குழுக்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், விறகுகளைச் சேகரிக்க 20 நாள்கள் ஈடுபட வேண்டும். அதேபோல் மூட்டம் போட்டதும் பாதுகாக்க வேண்டும். இதற்கிடையே கவனிக்காமல் விட்டுவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும். இதில் 25 டன் விறகில் மூட்டம் போட்டால் 10 டன் மரக்கரி கிடைக்கும். ஒரு டன் மரக்கரி தரத்திற்கேற்ப ரூ.11 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையில் விலை போகும்.
 குறைந்த முதலீடு, குறுகிய காலத்தில் உடனடிப் பணம் கிடைக்கிறது. ஆனால், இத்தொழிலில் ஈடுபடுவோர் மரக்கரி புகையை சுவாசிப்பதால் அவர்களுக்கு காச நோய், இதய நோய், புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது.
 மேலும், எந்த நேரமும் அனல் அருகே இருப்பதால் ஆண்மைக் குறைவு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால், இதையெல்லாம் பார்க்காமல் வயிற்றுப் பிழைப்புக்காக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com