
ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது, விரைவு ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் இறந்தார்.
திருத்தணி முருகப்பாநகரில் வசித்து வரும் தாமு (50), நகர தேமுதிக செயலராக உள்ளார். அவரது மகன் சாய்குமார்(21), ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சாய்குமார் வியாழக்கிழமை வழக்கம் போல் வேலைக்கு சென்று இரவுப் பணியை முடித்துக் கொண்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு திருத்தணிக்கு வந்தார். காந்தி சிலை அருகே இறங்கிய சாய்குமார், வீட்டுக்கு வருவதற்காக இரண்டாவது தானியங்கி ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றார். அப்போது ரேணிகுண்டாவில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற விரைவு ரயில், சாய்குமார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து அரக்கோணம் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சாய்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாய்குமாரின் மறைவு குறித்து அறிந்த திருவள்ளூர் மேற்கு தேமுதிக மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து நகர செயலர் தாமு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.