தேர்தல் செலவினக் கணக்குகளை 3 கட்டங்களாக சமர்ப்பிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 01st April 2019 06:19 AM | Last Updated : 01st April 2019 06:19 AM | அ+அ அ- |

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டப் பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 3 கட்டங்களாக தேர்தல் செலவினக் கணக்குகளை அதற்கான பதிவேடுகளுடன் தேர்தல் அதிகாரியிடம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூர் மக்களவைத் தொகுதி மற்றும் பூந்தமல்லி சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தல் கடந்த மாதம் 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி, வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவினக் கணக்குகளை அதற்கான பதிவேடுகளில் பராமரித்து 3 கட்டங்களாக, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்கு) சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை உதவி செலவின மேற்பார்வையாளர் தனது குழுவுடன் ஆய்வு மேற்கொள்வார். இப்பணிகளை மேற்கொள்வதற்கான அட்டவணையும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் தங்கள் செலவினப் பதிவேடுகளை வரும் 3, 10 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பூந்தமல்லி சட்டப் பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் 4, 11 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதனால், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்களால் பராமரிக்கப்படும் தேர்தல் செலவினப் பதிவேடுகளை நேரிலோ, தேர்தல் முகவர் அல்லது தங்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலமாகவோ செலவின மேற்பார்வையாளர்கள் குழுவிடம் ஆய்வுக்கு சமர்ப்பிப்பது அவசியம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.