கணினி உதவியுடன் சுழற்சி முறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
By DIN | Published On : 04th April 2019 06:20 AM | Last Updated : 04th April 2019 06:20 AM | அ+அ அ- |

பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒவ்வொரு வாக்குச் சாவடி மையங்களிலும் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களை கணினி உதவியுடன் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் மற்றும் தேர்தல் பொதுப் பார்வையாளர் சுரேந்திரகுமார் ஆகியோர் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்தனர்.
பூந்தமல்லி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தேர்தல் பொதுப்பார்வையாளர் சுரேந்திரகுமார் தலைமை வகித்தார். இதில், மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான மகேஸ்வரி ரவிகுமார் பேசியது:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன், 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவும் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதி, பூந்தமல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தலுக்கும் ஒரே நாளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சட்டப்பேரவைத் தொகுதிகள் தோறும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள், கணினி உதவியுடன் ஒதுக்கீடு செய்வதே வழக்கமாகும். அந்த வகையில், பூந்தமல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 387 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் கணினி உதவியுடன் இந்த வாக்குச் சாவடிகளுக்கும் அனைத்துக் கட்சியினரும் தொடுதிரையில் பார்க்கும் வகையில் ஒதுக்கீடு செய்வதாக அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, பூந்தமல்லி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குச் சாவடிகளுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.