கொடி, தோரணங்கள் இல்லாமல் களையிழந்த தேர்தல் திருவிழா

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் கிராமங்களில் அரசியல் கட்சிகளின் கொடி, தோரணங்கள் மற்றும் சுவர்களில் தலைவர்களின் விளம்பரங்கள்
கொடி, தோரணங்கள் இல்லாமல் களையிழந்த தேர்தல் திருவிழா

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் கிராமங்களில் அரசியல் கட்சிகளின் கொடி, தோரணங்கள் மற்றும் சுவர்களில் தலைவர்களின் விளம்பரங்கள் இல்லாமல், தேர்தல் திருவிழா களையிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பாலங்கள், வீட்டுச்சுவர்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்களை வரைவதில் ஓவியர்களிடையே பெரும் போட்டியே ஏற்படும்.
 அதையும் மீறி பொதுச் சுவர்களில் சிரித்த முகத்துடன் கட்சித் தலைவர்களின் படங்களும், மக்கள் மனதில் பதியும் வகையில் சின்னங்களும் வரையப்பட்டிருக்கும். தற்போது தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி காரணமாக சுவர்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களைப் பார்க்க முடியவில்லை. கிராமங்களில் மட்டுமில்லாமல் நகரங்களிலும் அரசியல் கட்சிகளின் கொடிகளும், தோரணங்களும் கட்டப்படுவதில்லை. 
அதேபோல், எந்த நேரமும் ஆட்டோவில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைக் கட்டிக் கொண்டு வாக்காளப் பெருமக்களே என்ற முழக்கம் கிராமங்கள் தோறும் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் கொட்டகை அமைப்பர். 
அங்கு காலையிலும், மாலையிலும் அவர்கள் கூடுவர். அங்கிருந்து வீடு, வீடாக சென்று வாக்குகள் சேகரிப்பில் ஈடுபடுவர்.
ஆனால், இப்போது தெருக்களிலும் யாரும் கூடாமல், அவரவர் வேலைகளுக்கு சென்று விடும் சூழ்நிலையே உள்ளது. அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்க வரும்போது நிர்வாகிகள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மக்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். 
இது குறித்து செஞ்சி பானம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம்(60) கூறியது:
இதற்கு முன்பு தேர்தல் என்றாலே திருவிழாதான். அந்த அளவுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் கொடி தோரணங்கள், சுவரொட்டிகள், கொடிகள் ஆகியவை அரசியல் கட்சியினரால் வழங்கப்படும். 
அதேபோல், இரவு ஒவ்வொரு வீடாகச் சென்று பிரச்னையில்லாமல் அவரவர் கட்சிகளுக்கு வாக்கு சேகரிப்பர். இதனால் தேர்தல் அறிவித்த நாளில் இருந்து, வாக்கு எண்ணிக்கை நாள் வரை கிராமமே திருவிழா போல் காணப்படும். 
ஆனால், தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை விதித்து கொடி தோரணங்கள், சுவரொட்டிகளுக்குத் தடை விதித்துள்ளது. இதனால் வேட்பாளர் வரும்போது சாலையோரங்களில் எந்த அரசியல் கட்சியினர் வருகிறார்கள் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக கொடியை மட்டும் நடுகின்றனர். அதுவும் அவர்கள் வந்து சென்ற பின்னர் உடனே அகற்றப்படுகிறது. 
மேலும், ஒவ்வொரு தேர்தலும் வெறும் சம்பிரதாய கடமையாக மாறி வருவதால் கிராமங்களில் தேர்தல் திருவிழா கலையிழந்து காணப்படுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com