சுடச்சுட

  

  மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரம்சிபிஐ தொடர்ந்து விசாரிக்கும்: உச்சநீதிமன்றம்

  By DIN  |   Published on : 17th April 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரி ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பான விவகாரத்தை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த சர்தார் பாஷா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரியில் 2017-இல் 30 உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களிடம் ரூ. 30 லட்சம்,  பிற மதத்தைச் சேர்ந்தவர்களிடம் ரூ.35 லட்சம் லஞ்சமாக பெறப்பட்டு, கல்லூரி நிர்வாகக் குழு  உறுப்பினர்கள்,  வக்ஃபு வாரியத் தலைவர் மற்றும் அமைச்சர் ஒருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. பணி நியமனம் செய்யப்பட்ட  30 பேரில் பலர் பல்கலைக்கழக மானியக் குழு விதிப்படி  உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்வதற்கு உரிய கல்வித் தகுதியைப் பெறவில்லை. ஆனால்,  அமைச்சர்,  வஃக்பு வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு உதவிப் பேராசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளனர். 
  இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐக்கு புகார் அனுப்பப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே,  வக்ஃபு வாரியக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
  மேல்முறையீடு: இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து  ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கடந்த ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது.  இந்த  உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கல்லூரியின்  செயலாளர்  என். ஜமால் மொய்தீன் கடந்த பிப்ரவரி 26-இல் மேல்முறையீடு செய்தார்.
  இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, எம்.எம். சந்தானகௌடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மார்ச் 29-இல் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர் சர்தார் பாஷா சார்பில்  மூத்த வழக்குரைஞர் ஏ. சிராஜுதின் ஆஜராகி,  ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரம் முறையாக விசாரிக்கப்பட வேண்டும்' என்றார்.  சிபிஐ சார்பில் வழக்குரைஞர்கள் சோனியா மாத்தூர், குமார் பரிமல் ஆகியோர்  ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏராளமான ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது.   எனவே,  சிபிஐ விசாரணைக்குத் தடை  விதிக்கக் கூடாது' எனக் கேட்டுக் கொண்டார்.
  மனுதாரர் என். ஜமால் மொய்தீன் சார்பில்  ஆஜரான மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா, சிபிஐ விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்' என்றார். இக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கு  தொடர்பாக எதிர்மனுதாரர் சர்தார் பாஷா,  சிபிஐ ஆகியோர் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
  இந்நிலையில், இந்த வழக்கு  விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி. ரமணா, எம்.எம். சந்தானகெளடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையும் நடைபெற்ற விசாரணையின்போது,  மனுதாரர் என். ஜமால் மொய்தீன் சார்பில்  ஆஜரான மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா, இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிப்பது உகந்தது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்த விவகாரத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது தவறு' என்றார்.
  இதையடுத்து  நீதிபதிகள், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிப்பதால் உங்களுக்கு என்ன ஆட்சேபம் இருக்க முடியும் என வினவியதுடன்,  இந்த வழக்கை சிபிஐயே விசாரிக்கட்டும் என்றனர்.   
  மேலும், விசாரணை நியாயமான முறையில்  நடைபெற வேண்டும். தமிழக காவல்துறை விசாரிப்பதில் என்ன ஆட்சேபனை உள்ளது என எதிர்மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர். 
  இதற்கு, எதிர்மனுதாரரின் வழக்குரைஞர் சிராஜுதின், தமிழகத்தில் லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் குறிப்பாக நீதிபதி கிருபாகரனின் தீர்ப்புகள் இதை சுட்டிக்காட்டுகின்றன. ஒருவேளை தமிழக காவல் துறை இந்த விவகாரத்தை விசாரித்தால், அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளை முறையாக விசாரிக்க மாட்டார்கள்' என்றார். 
  இதையடுத்து,  நீதிபதிகள், தமிழகத்தின் எந்த காவல் துறை உயரதிகாரி விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவியுங்கள். அந்த அதிகாரிக்கு உத்தரவிடுகிறோம்' எனக் கூறினர்.
  இதற்கு மூத்த வழக்குரைஞர் ஏ. சிராஜுதின்,  தமிழக அரசின் உள்துறை பாதுகாப்புப் பிரிவின் ஐஜியாக உள்ள சி. ஈஸ்வரமூர்த்தி விசாரிக்கட்டும். அவருக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளது. நேர்மையான அதிகாரி' என்றார். ஆனால், இதற்கு வழக்குரைஞர் லூத்ரா ஆட்சேபம் தெரிவித்தார். 
  உத்தரவு: இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் சிபிஐ வழக்குரைஞரிடம் நிலைப்பாடு குறித்து கேட்டனர். சிபிஐ சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் சோனியா மாத்தூர், குமார் பரிமல் ஆகியோர், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் இந்த வழக்கை விசாரித்து வருகிறோம். பலஇடங்களில் சோதனை நடத்தியதில் குற்றம் தொடர்புடைய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளோம்' என்றனர்.
  அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன் அது தொடர்பான அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai