முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
நீர்வரத்து ஓடைகளில் தடுப்பணைகள் அமைக்கும் பணிகள்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
By DIN | Published On : 04th August 2019 01:23 AM | Last Updated : 04th August 2019 01:23 AM | அ+அ அ- |

திருத்தணி ஊராட்சி ஒன்றியம், தாடூர் ஊராட்சியில் நீர்வரத்து ஓடைகளில் தடுப்பணைகள் மற்றும் தடுப்பணைகளின் கீழ்பகுதிகளில் நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் மற்றும் திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் ஆகியோர் தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பேசியது:
தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை சராசரி அளவைவிட குறைந்து பெய்து வரும் காரணத்தால், திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவு குறைந்துள்ளது. குறிப்பாக, திருத்தணி ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு மற்றும் பூண்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் நிலத்தடி நீர் மட்டம் 600 முதல் 800 அடி வரை கீழே சென்று விட்டது.
இதனால் கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வெளியூர்களிலிருந்தும், விவசாய கிணறுகளிலிருந்தும், டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து வந்து விநியோகம் செய்து வரும் நிலை உள்ளது.
இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சிறப்பான திட்டம் ஒன்று வகுக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தீவிரமாக ஆராயப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்துக்குள் இருக்கும் கொசஸ்தலையாறு, கூவம் ஆறு, ஆரணி ஆறு மற்றும் நந்தியாறு ஆகிய ஆறுகளுக்கு, நீர்வரத்து வரும் ஓடைகளில், தடுப்பணைகள் மற்றும் தடுப்பணைகளின் கீழ்பகுதிகளில் நீர் உறிஞ்சும் கிணறுகள், அமைத்து நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாழும் கலை நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2019-20-ஆம் ஆண்டின் கீழ், இப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் திருத்தணி ஊராட்சி ஒன்றியம், தாடூர் ஊராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல், சுற்றுச்சூழல் மாசுபடாமல் தவிர்த்திடும் வகையிலும், மழைவளத்தை பெருக்கும் நோக்கிலும் திருவள்ளூர் மாவட்டத்தில், இம்மாத இறுதிக்குள் 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் அனைத்து வகை பணிகளும் மேற்கொண்டு வருகிறது என்றார் ஆட்சியர்.