திருத்தணி முருகன் கோயிலில் ஆடிப்பூர விழா கோலாகலம்

திருத்தணி முருகன் கோயிலில், சனிக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர விழாவில், திரளான பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம்


திருத்தணி முருகன் கோயிலில், சனிக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர விழாவில், திரளான பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் ஏந்தியும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
 அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில், சனிக்கிழமை ஆடிப்பூர விழாவையொட்டி, மூலவருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, தங்கக் கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு, மலைக் கோயிலில் உள்ள காவடி மண்டபத்தில், உற்சவர் பெருமானுக்கு, 108 பால்குட அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
  விழாவையொட்டி, சனிக்கிழமை காலை முதலே பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், மலர் மற்றும் மயில் காவடிகள் எடுத்து, பம்பை, உடுக்கை முழங்க கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன், மலைப்படிகள் வழியாகச் சென்று மூலவரை தரிசித்தனர். அதுபோல் பால்குடம் எடுத்துச் சென்றும் வழிபட்டனர். 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க 3 மணி நேரம் காத்திருந்தனர். சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். 
  இரவு 7.30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாட வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின் பேரில், திருத்தணி டி.எஸ்.பி. சேகர் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) ஞானசேகர் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com