அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்: மாதர் சங்கத்தினர் 13 பேர் கைது

திருவள்ளூர் அருகே அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்கவும், இணைப்புச் சாலை உள்ளிட்ட  அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரியும்
அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்: மாதர் சங்கத்தினர் 13 பேர் கைது


திருவள்ளூர் அருகே அங்கன்வாடி கட்டடத்தை சீரமைக்கவும், இணைப்புச் சாலை உள்ளிட்ட  அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரியும் காலிக்குடங்களுடன் முட்டி போடும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய மாதர் சங்கத்தைச் சேர்ந்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர். 
 திருநின்றவூர் பேரூராட்சிக்குள்பட்ட பெரியார் நகரைச் சேர்ந்த 13-ஆவது வார்டைச் சேர்ந்த பெண்கள் வெள்ளிக்கிழமை முட்டி போடும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
 பெரியார் நகரில் உள்ள அங்கன்வாடி மையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் பூந்தமல்லி பகுதி செயலாளர் எம்.பெளணர்மி தலைமை வகித்தார். 
இதில் பகுதித் தலைவர் கெஜலட்சுமி முன்னிலை வகித்தார்.  குழந்தைகள் மையத்திற்கு புதிய கட்டடம், இணைப்புச் சாலைகள் அமைக்கக் கோரியும், குறைந்தபட்சம் 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலிக்குடங்களுடன் முட்டி போடும் போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். காவல்துறை அனுமதியின்றி நடைபெற்றதால், போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீஸார் கைது செய்தனர். 
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது: பெரியார் நகர் 13-ஆவது வார்டில் 1993-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் மேம்படுத்தப்பட்ட குழந்தைகள் மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்திற்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர்.  
குழந்தைகள் மையமாக மட்டுமின்றி, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் மையமாகவும் இயங்கி வருகிறது. தற்போதைய நிலையில் இக்கட்டட வளாகச் சுவர்கள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. 
எனவே, குழந்தைகள் பாதுகாப்புக் கருதி அருகில் உள்ள குடியிருப்புக்கு இந்த மையம் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது அங்குதான் இயங்கி வருகிறது. இந்த கட்டடம் கடந்த 8-ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. அதேபோல், குழந்தைகள் மையத்திற்கு செல்லும் இணைப்புச் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. அதோடு மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி சிறு குளம் போல் காட்சியளிப்பதால் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் சென்று வர முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 
மேலும், பெரியார் நகர் பகுதிக்கு பேரூராட்சி நிர்வாகம் 20-நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் தனியார் லாரித் தண்ணீரையே விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த கோரிக்கைகளை சீரமைத்துத்தர வலியுறுத்தியே போராட்டம் நடத்தப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com