ஆக. 29 வரை சிறப்புக் குறைதீர் முகாம்

திருத்தணி நகராட்சியில் புதன்கிழமை தொடங்கிய சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் 20-க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையரிடம் மனுக்களை


திருத்தணி நகராட்சியில் புதன்கிழமை தொடங்கிய சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் 20-க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையரிடம் மனுக்களை வழங்கினர்.
 தமிழக முதல்வர் அனைத்து நகர்ப்புற வார்டுகள் மற்றும் கிராமங்களில், சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடத்தி பொதுமக்களிடமிருந்து 21-ஆம் தேதி முதல் வரும் 29-ஆம் தேதி வரையிலும் மனுக்களை பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பணி நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, பொதுமக்கள் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும், தங்களின் பகுதிகளில் உள்ள குறைகள் குறித்தும் மனுவாக அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
 அதன் அடிப்படையில் புதன்கிழமை திருத்தணி நகராட்சியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஏற்படுத்தி மனுக்கள் பெறப்பட்டது. முதல் நாளில், 20-க்கும் மேற்பட்டோர் மனுக்கள் கொடுத்தனர்.  இந்த மனுக்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரை செய்து, ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
 இதுகுறித்து நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி கூறும்போது, முதல்வரின் உத்தரவுப்படி நடைபெறும் இந்த முகாமில், அனைத்துத்  துறை சார்ந்த மனுக்களும் பெறப்பட்டு வருகிறது. 
முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா சான்றுகள் உள்பட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் பெற விடுமுறை நாட்களைத் தவிர,   வரும் 29-ஆம் தேதி மாலை வரை மனுக்கள் கொடுக்கலாம்.
 ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் மூன்று வார்டுகள் வீதம் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கப்படுகிறது. பொதுமக்கள் முகாமில் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம் என்றார் அவர்.
பொன்னேரியில்... 
 அழிஞ்சிவாக்கம், ஞாயிறு கிராமங்களில் பொன்னேரி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சன் பங்கேற்று, பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.  இதேபோல் மற்ற 27 வருவாய் கிராமங்களில் மண்டலத் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மனுக்களைப் பெற்றனர். 
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 810 மனுக்கள், துறை ரீதியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும், வரும் 29-ஆம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது  ஒரு மாத காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, செப்டம்பர் மாதம் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com