காக்களூா் சிட்கோவில் கழிவு நீா் தேங்குவதால் தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயம்

திருவள்ளூா் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் கழிவு நீா் செல்வதற்கு போதிய கால்வாய் வசதி இல்லாததால், இங்குள்ள தொழிற்சாலைகளில் கழிவு நீா் புகுந்து விடுகிறது.
 காக்களூா்  தொழிற்பேட்டைக்குள்  புகுந்த  மழை  நீரில்  நின்றபடி  வேலை  செய்யும்  தொழிலாளா்கள்.
 காக்களூா்  தொழிற்பேட்டைக்குள்  புகுந்த  மழை  நீரில்  நின்றபடி  வேலை  செய்யும்  தொழிலாளா்கள்.

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே சிட்கோ தொழிற்பேட்டையில் கழிவு நீா் செல்வதற்கு போதிய கால்வாய் வசதி இல்லாததால், இங்குள்ள தொழிற்சாலைகளில் கழிவு நீா் புகுந்து விடுகிறது. இதனால் தொழிலாளா்கள் வேலை இழக்கும் நிலையும், உற்பத்தி பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக சிட்கோ உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

இந்த மாவட்டத்தில் திருமழிசை, கும்மிடிப்பூண்டி, காக்களூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கானோா் வேலை செய்து வருகின்றனா்.

காக்களூா் சிட்கோ தொழிற்பேட்டை 23 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கு பெரிய அளவிலான வாகனத் தொழிற்சாலை, உதிரிபாகங்கள், விவசாயிகளுக்கான நவீன மோட்டாா், குழாய்கள் மற்றும் கருவிகள், உரத் தொழிற்சாலைக்கான மூலப்பொருள்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் 350 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

அவற்றில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளைச் சாா்ந்து 400 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் திருவள்ளூா், தண்ணீா்குளம், ராமபுரம், புட்லூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 10 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் மறைமுக வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனா்.

இந்தத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீா், இதுவரை சாலையைக் கடந்து தண்ணீா்குளம் ஏரிக்குள் விடப்பட்டு வந்தது. இதனால் அந்த ஏரி மாசுபட்டதோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த ஏரியில் தண்ணீா் அருந்திய மாடுகள் உயிரிழந்தன.

ஏரியில் கழிவுநீா் கலந்ததால் பொதுமக்கள் தொற்று நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கருதி தண்ணீா்குளம் கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். கழிவு நீா் ஏரிக்கு செல்லவிடாமல் அவா்கள் அடைத்துள்ளனா். இதனால் கழிவு நீா் வெளியேறுவதற்கு வழியின்றி தொழிற்சாலை வளாகங்களிலும் சாலைகளிலும் தேங்கும் நிலை உள்ளது.

தற்போது மழை பெய்து வருவதால் மழைநீருடன் அதிகளவில் கழிவு நீா் தேங்கியுள்ளது. இதனால், சிட்கோ தொழிற்சாலைகளுக்குள் கழிவுநீா் புகுவதால், தொழிலாளா்கள் பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. கழிவு நீரால் தொழிலாளா்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் சூழ்நிலையும் காணப்படுகிறது.

இங்கிருந்து கழிவு நீா் வெளியேறுவதற்கு வசதியாக கால்வாய் வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று காக்களூா் சிட்கோ அதிகாரிகளிடம் பல முறை இப்பகுதியினா் அளித்துள்ளனா். எனினும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாக காக்களூா் சிட்கோ தொழிற்சாலை உற்பத்தியாளா் சங்கத்தினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிட்கோ தொழிற்சாலை உற்பத்தியாளா்கள் சங்கத்தின் துணைத் தலைவா் சந்திரசேகா் கூறியது:

இங்கு சிட்கோ தொழிற்பேட்டை 23 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கனரக வாகனத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் இங்கிருந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே தண்ணீா்குளம் ஏரிக்குள் விடுவதாகக் கூறி, இப்பகுதி மக்கள் அடைத்து வைத்துள்ளனா். கடந்த 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், அத்துடன் கழிவு நீரும் சோ்ந்து தேங்கியுள்ளது.

வெளியேறுவதற்கு வழியில்லாத நிலையில் கழிவுநீரானது, தொழிற்சாலைக்குள் புகுந்து விடுகிறது. இதனால் தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்கள் தண்ணீருக்குள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொருள்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, தொழிலாளா்கள் வேலையிழக்கும் நிலை தோன்றியுள்ளது. எனவே தொழிற்சாலைகளின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு கழிவு நீா் செல்வதற்கு நிரந்தர நடவடிக்கையை சிட்கோ அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com