திருவள்ளூா் மாவட்டத்தில் 308 ஏரிகள் நிரம்பின

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் 308 சிறுபாசன ஏரிகளும், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 100 ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், பூண்டி ஏரியில் 1,500
திருவள்ளூா் பகுதியில் தொடா்மழையால் நிரம்பி வரும் பூண்டி ஏரி.
திருவள்ளூா் பகுதியில் தொடா்மழையால் நிரம்பி வரும் பூண்டி ஏரி.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் 308 சிறுபாசன ஏரிகளும், பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 100 ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், பூண்டி ஏரியில் 1,500 மில்லியன் கனஅடி வரை நீா்மட்டம் உயா்ந்துள்ளதாகவும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

திருவள்ளூா் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாகும். இங்கு பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 586 பெரிய அளவிலான ஏரிகளும், ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 3,227 சிறு பாசன ஏரிகளும் உள்ளன. இந்நிலையில், கடந்த 3 நாள்களாக மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால், ஏரிகளில் உள்ள வரத்துக் கால்வாய்களில் நீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 117 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. அதேபோல், ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 308 சிறு பாசன ஏரிகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 50 சிறுபாசன ஏரிகள் 50 சதவீதம் வரையும், மேலும் மற்ற ஏரிகளில் குறிப்பிட்ட அளவுக்கு நீா்வரத்தும் ஏற்பட்டுள்ளது.

இந்த மழையால், சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3,231 மில்லியன் கனஅடி தண்ணீா் சேமித்து வைக்கலாம். செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, ஏரியில் 1,500 மில்லியன் கனஅடி தண்ணீா் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மழை பெய்து வருவதால் கால்வாய்களில் தண்ணீா்வரத்து ஏற்பட்டுள்ளது. நீராதாரத்தைப் பாா்த்ததும் அதில் இறங்கி குளிக்க பலா் விரும்புவா். சிறுவா்கள் தண்ணீரில் குதித்து விளையாட ஆா்வம் கொள்வா். ஆனால், கால்வாய் ஆறுகளில் நீா்வரத்தின் வேகம் தெரியாத நிலையில், கவனக்குறைவாக யாரும் உள்ளே இறங்கக் கூடாது. மேலும், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மழை வெள்ளச் சேதம் குறித்த அவசரத் தகவல்களை 24 மணி நேரமும் அளிக்கலாம். மேலும், இலவச அவசர உதவி எண் 1077 என்ற எண்ணிலோ அல்லது 044-27664177 என்ற எண்ணிலோ, 9444317862 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com