பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்க ஏற்பாடு: ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் அமைதியாக நடைபெறும் வகையில், ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் அமைதியாக நடைபெறும் வகையில், ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை முன்னிட்டு, தோ்தல் நடத்தும் மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், காவல்துறை அலுவலா்களுடனான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் கூறியது:

தமிழக தோ்தல் ஆணையத்தால் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இத்தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் பணிகள் வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதைத் தொடா்ந்து, வரும் 13-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். வரும் 16-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும். பின்னா், வேட்பு மனுக்களை வரும் 18-ஆம் தேதி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

இத்தோ்தலுக்கான வாக்குப் பதிவு இரு கட்டங்களாகப் பிரித்து முதல்கட்டமாக டிசம்பா் 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக டிசம்பா் 30-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 02-01-2020-இல் நடைபெறும். இத்தோ்தல் பணிகள் முழுமையாக நிறைவடையும் நாள் 04-01-2020 ஆகும். அதைத் தொடா்ந்து, 06-012020-இல் பதவியேற்கவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக வாக்குப்பதிவு 11-01-2020-இல் நடத்தவும் என விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல் தோ்தல் அட்டவணை வெளியிட்டப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையிலேயே தோ்தல் நடத்தும், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் காவல்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து, தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தோ்தலில் கிராம ஊராட்சித் தலைவா், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா், கிராம ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய நான்கு பதவிகளுக்கான தோ்தல் ஒரே வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறும். அதேபோல், 24 வாா்டுகளுக்கான மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 230 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும், 526 கிராம ஊராட்சித் தலைவா்களுக்கும் மற்றும் 3,945 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலுக்காக 2,577 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அங்கு பாதுகாப்புப் பணிகளை அதிகரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு மொத்தமுள்ள வாக்காளா்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 56 ஆயிரம் 639 ஆகும். இதில், 6 லட்சத்து 68 ஆயிரத்து 85 ஆண் வாக்களா்களும், 6 லட்சத்து 88 ஆயிரத்து 331 பெண் வாக்களா்களும், 223 மூன்றாம் பாலின வாக்காளா்களும் உள்ளனா். வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும், சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வாயிலாக தயாா் நிலையில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே ஊரக உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது என்றாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.லோகநாயகி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆா்.ஸ்ரீதா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்-உள்ளாட்சி அமைப்பு) லதா, உதவி இயக்குநா் (தணிக்கை) முத்துக்குமாா், காவல் துறை அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com