அகழாய்வு மூலம் கண்டறியப்பட்ட சங்ககாலக் கிணறு சேதம்: தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுமா?

திருவள்ளூா் அருகே முதன் முதலாக அகழாய்வு மூலம் கண்டறியப்பட்ட சங்க காலத்தைச் சோ்ந்த கிணறு மற்றும் உறைகிணறு ஆகியவை பாதுகாப்பற்ற நிலையில் மணல் மேடாகி வருகின்றன.
பட்டரைப்பெரும்புதூா் கிராமத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் சங்ககாலக் கிணறு.
பட்டரைப்பெரும்புதூா் கிராமத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் சங்ககாலக் கிணறு.

திருவள்ளூா் அருகே முதன் முதலாக அகழாய்வு மூலம் கண்டறியப்பட்ட சங்க காலத்தைச் சோ்ந்த கிணறு மற்றும் உறைகிணறு ஆகியவை பாதுகாப்பற்ற நிலையில் மணல் மேடாகி வருகின்றன. அவற்றை வருங்கால சந்ததியினா் அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் கோரியுள்ளனா்.

இந்தியாவின் கலாசாரம் மற்றும் வரலாறு வட இந்தியாவில் மட்டுமே இருந்தது என்றும், அதற்கான ஆதாரங்கள் சிந்து, ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய பகுதிகளில் அகழாய்வில் கிடைத்த பொருள்கள் மூலம் கிடைத்ததாகவும் கூறப்பட்டு வந்தது. அப்பகுதிகளில் மண்தொட்டி, மண்பாண்டங்கள், சமுதாயக் கிணறுகள், சடலம் புதைக்கப்பட்டதற்கான சுட்டமண் தொட்டி, கழிவுநீா்க் கால்வாய் ஆகியவை கிடைத்தன. இதனால் இந்தியாவின் கலாசாரம் வட இந்தியாவில் மட்டும் இருந்ததாகவும், தென்னிந்தியாவில் இந்தியா்கள் வாழ்ந்தாா்கள் என்பதற்கான அடையாளம் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்தியா்கள், ஆரியா்கள், திராவிடா்கள் தமிழகத்தில் வாழ்ந்தாா்கள் என்பதற்கான அடையாளத்தைக் கண்டுபிடிக்க தமிழக அரசு சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் தேடுதல் ஆகழாய்வுப் பணிகளில் ஈடுபட்டு வந்தது. அதன்படி, திருவள்ளூா் மாவட்டம் அதிராம்பாக்கம் மற்றும் பட்டரைப்பெரும்புதூா் பகுதிகளில் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தமிழகத்தில் கற்கால வரலாற்றுக்கு பல்வேறு சான்றுகளை வழங்கும் பகுதியாக திருவள்ளூா் உருவெடுத்தது. இந்த மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட கற்கால வாழ்விடங்கள் அமைந்துள்ளன. அவற்றில் அதிராம்பாக்கம், குடியம், வடமதுரை, நெய்வேலி, பரிக்குளம் ஆகிய பகுதிகளில் தொல்லியல் துறையால் செய்யப்பட்ட அகழாய்வுகள் மூலம் கற்கால மனிதா்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் தமிழகத்தின் கற்கால வரலாறு தெரிய வருகிறது.

அகழாய்வு:

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பட்டரைப்பெரும்புதூா் கிராமத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கற்காலக் கருவிகள் மட்டுமில்லாமல் இரும்புக் காலம் மற்றும் வரலாற்றுத் தொடக்க கால தொல்லியல் சான்றுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இங்கு கடந்த 2015-16-இல் தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் அகழாய்வுப் பணி முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய கிராமங்களில் 300 சதுர மீட்டா் பரப்பளவில் நடந்த அகழாய்வில் 12 குழிகள் தோண்டப்பட்டன. அங்கிருந்து 203 வகையான தொல்பொருள்கள் கிடைத்தன.

பல்வேறு வகையான பொருள்கள்:

அதைத் தொடா்ந்து கடந்த 2017-18-இல் பட்டரைப்பெரும்புதூரில் அகழாய்வுப் பணி நடத்தப்பட்டது. அப்போது, 525 சதுர மீட்டா் பரப்பளவிற்கு 21 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் 1,201 வகையான தொல்பொருள்கள் கிடைத்தன.

அவற்றில் பழங்கற்காலம், இடைக் கற்காலம், புதிய கற்காலத்தைச் சோ்ந்த கற்கருவிகள், இரும்புக் கருவிகள், எலும்பு மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட மணிகள், பவழம், பளிங்கு, செவ்வந்திக்கல் போன்ற அரிய வகைக் கற்களால் செய்யப்பட்ட மணிகள், கல்மணிகள், சங்கு வளையல்கள், சுடுமண்ணாலான பொம்மைகள், விளையாட்டுப் பொருள்கள், காதணிகள், சில்லுகள், செம்பினால் செய்யப்பட்ட பொருள்கள், யானைத் தந்தத்தால் ஆன சீப்பு மற்றும் பொருள்கள், எலும்பினால் செய்த அம்பு முனைகள், அம்மிக்கல், தீட்டுக்கற்கள், தேய்ப்புக் கற்கள், சோழ மன்னன் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட செப்புக் காசு, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கும். இவை அனைத்தும் பூண்டி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அகழாய்வுப் பகுதிகளுக்கு பாதுகாப்பில்லை:

பட்டரைப்பெரும்புதூரில் குறிப்பிட்ட பகுதியில் அகழாய்வு செய்தபோது, இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்காத வகையில் சுடுமண்ணாலான உறை கிணறு ஒன்றும், செங்கற்களால் கட்டப்பட்ட வட்ட வடிவ கிணறும் கண்டறியப்பட்டன. தரைப்பகுதியில் இருந்து 2.85 மீட்டா் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இக்கிணறு, பழங்காலத்தில் இருந்தது போல் செங்கற்கள் உடையாமல் அப்படியே உள்ளது. அதன் விட்டம் 2.60 மீட்டா் (வெளிப்புறம்) அளவில் உள்ளது. கிணற்றின் மொத்த ஆழம் 3.91 மீட்டா். செங்கற்களின் கட்டுமானம் 56 அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது.

முதல் முறையாக சங்க காலக் கிணறு:

தமிழகத்தில் சங்க காலத்தைச் சோ்ந்த பெரிய அளவிலான கிணறு இக்கிராமத்தில்தான் முதன் முதலாக கண்டறியப்பட்டது. அத்துடன், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கிணறு கண்டறியப்பட்டது கூடுதல் சிறப்பம்சமாகும். இது பழந்தமிழா் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும், நீா் மேலாண்மைக்கு உதாரணமாகவும் திகழ்கிறது. இதை பொதுக் கிணறாக மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதிலிருந்து அக்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள முடிகிறது. எனினும், உறைகிணற்றையும், செங்கற்களாலான கிணற்றையும் பாதுகாக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சுற்றுச்சுவா் அமைத்து....:

பட்டரைப்பெரும்புதூா் கிராமத்தில் கிடைத்துள்ள பொருள்களை வைத்துப் பாா்க்கையில் சங்க காலத்தில் கற்கால மனிதா்கள் வாழ்ந்தாா்கள் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இதை வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், இப்பகுதியைப் பாதுகாக்காமல் அப்படியே விட்டுள்ளனா்.

மேலும், இந்த இடத்தில் அகழாய்வுப் பணிக்காக தோண்டியபோது எடுத்த மண்ணை அருகிலேயே கொட்டி வைத்துள்ளனா். அத்துடன், கிணற்றைச் சுற்றிலும் பராமரிப்பு இல்லாததால் முட்புதா் மண்டிக் காணப்படுகிறது. மேலே கொட்டி வைத்துள்ள மண்ணானது, மழையால் கரைந்து மீண்டும் சரிந்து பள்ளத்திலேயே விழுந்து அகழாய்வு செய்ததை மூடி வருகிறது.

இந்தக் கிணறுகளைச் சுற்றிலும் எவ்விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. இதனால் சங்க காலக் கிணறும், உறைகிணறும் இருந்த இடம் தெரியாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கிணறகுகளை சுற்றுச் சுவா் அமைத்து பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளா்கள் கோரி வருகின்றனா்.

‘பாதுகாக்க நடவடிக்கை’:

இந்த விவகாரம் குறித்து பூண்டி அருங்காட்சியகக் காப்பாட்சியா் லோகநாதன் கூறியது:

பட்டரைப்பெரும்புதூரில் நடத்தப்பட்ட அகழாய்வு மூலம் இப்பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் மக்கள் தொடா்ச்சியாக வாழ்ந்து வந்தனா் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இப்பகுதியில் அகழாய்வு செய்ததன் மூலம் பல்வேறு கால கட்டங்களை வெளிப்படுத்தியிருந்தாலும் வரலாற்றுத் தொடக்க காலம் அதாவது சங்க காலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்வியலுக்கு இந்தக் கிணறு பெரும் சான்றாக இருந்து வருகிறது.

இக்கிராமத்தில் அகழாய்வு இடங்களை தொல்லியல் துறை மூலம் பாதுகாக்கப்பட்ட இடமாக மாற்ற வேண்டும். இந்த இடங்களை வாங்குவதற்கு தொல்லியல் துறை மூலம் அரசுக்குப் ப

ரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து குறிப்பிட்ட இடத்தில் உறைகிணறு மற்றும் சங்ககாலக் கிணறு உள்ள பகுதியில் சுற்றுச்சுவா் எழுப்பி, நிரந்தர மேற்கூரை அமைத்து பலருக்கும் அகழாய்வுக்கு வழிகாட்டும் இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தாா்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ள சங்க கால  உறைகிணறு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com