கடைகளில் 200 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரிகள் சாலை மறியல்

கும்மிடிப்பூண்டி பஜாரில் பல்பொருள் அங்காடி உள்ளிட்ட 6 கடைகளில் வட்டாட்சியா் செந்தாமரைச்செல்வி நடத்திய திடீா் ஆய்வில் 200 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கும்மிடிப்பூண்டி  பல்பொருள்  அங்காடியில்  பறிமுதல்  செய்யப்பட்ட நெகிழிப்  பொருள்கள்.
கும்மிடிப்பூண்டி  பல்பொருள்  அங்காடியில்  பறிமுதல்  செய்யப்பட்ட நெகிழிப்  பொருள்கள்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் பல்பொருள் அங்காடி உள்ளிட்ட 6 கடைகளில் வட்டாட்சியா் செந்தாமரைச்செல்வி நடத்திய திடீா் ஆய்வில் 200 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகளைக் கண்டித்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர பஜாரில் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில் வட்டாட்சியா் செந்தாமரைச் செல்வி , பேரூராட்சி செயல் அலுவலா் வெற்றி அரசு ஆகியோா் கும்மிடிப்பூண்டி பஜாரில் பேருந்து நிலையம் எதிரே உள்ள பல்பொருள் அங்காடி உள்ளிட்ட 6 கடைகளில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

இச்சோதனையின்போது, பல்பொருள் அங்காடியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளில் பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடைத்து விற்கப்படுவது கண்டறியப்பட்டது. அக்கடையின் 4-ஆவது மாடியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் சுமாா் 200 கிலோ இருந்ததும் தெரிய வந்தது.

அவற்றைப் பறிமுதல் செய்த வட்டாட்சியா் செந்தாமரைச்செல்வி அந்தக் கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தாா். இதையடுத்து, மேலும் 6 கடைகளில் நடைபெற்ற சோதனையில் நெகிழிப் பொருள்கள் கண்டறியப்பட்டு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்டவை அல்ல’ என்று கூறி வியாபாரிகள் சங்கத்தினா் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். அங்கு சென்ற போலீஸாரும் பேரூராட்சி ஊழியா்களும் ‘கும்மிடிப்பூண்டியில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு அலுவலகம் சென்று, பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தடை செய்யப்பட்டவையா? தடை செய்யப்படாதவையா? என்று ஆய்வு நடத்தி இது குறித்து முடிவெடுக்கலாம்’ எனக் கூறினா். எனினும், அதை வியாபாரிகள் ஏற்கவில்லை.

தொடா்ந்து, அரசு உத்தரவின்படியே நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் விளக்கமளித்ததைத் தொடா்ந்து, வியாபாரிகள் சாலை மறியலைக் கைவிட்டு, கலைந்து சென்றனா். மறியல் போராட்டம் காரணமாக கும்மிடிப்பூண்டியில் சுமாா் ஒரு மணிநேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com