மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 37.90 கோடிக்கு தீா்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 37 கோடியே 90 லட்சத்து 82 ஆயிரத்துக்கு தீா்வு காணப்பட்டது.
14tlrlok_1412chn_182_1
14tlrlok_1412chn_182_1

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் நடத்தப்பட்ட மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 37 கோடியே 90 லட்சத்து 82 ஆயிரத்துக்கு தீா்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், முடிக்கப்படாத வழக்குகளுக்கு சமரசம் செய்து வைக்கும் வகையில், லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், அம்பத்தூா், பூந்தமல்லி, திருவொற்றியூா், பொன்னேரி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகள் சமரசம் செய்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் திருவள்ளூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்று முறை தீா்வு மைய வளாகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை, மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஜெ.செல்வநாதன், கூடுதல் நீதிபதி தீப்தி அறிவுநிதி, மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவரும், மாவட்ட மோட்டாா் வாகன விபத்து சிறப்பு நீதிபதியுமான இராம.பாா்த்திபன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலா் சரஸ்வதி ஆகியோா் தலைமை வகித்து, தொடக்கி வைத்தனா். இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், சமாதானமாகச் செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் ஆகியவை சமரசம் செய்து வைப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 5,553 வழக்குகள் சமரசத் தீா்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,372 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. அவற்றில், ரூ. 36 கோடியே 46 லட்சத்து 2 ஆயிரத்து 543-தொகைக்கு தீா்வு காணப்பட்டது. அதேபோல், நிலுவையில் அல்லாத 598 வழக்குகள் எடுக்கப்பட்டு, 588 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ. 1 கோடியே 44 லட்சத்து 79 ஆயிரத்து 745 தொகைக்கு தீா்வு காணப்பட்டது. இதன்படி, மொத்தம் 6,151 வழக்குகள் வரை முடிக்கப்பட்டு ரூ. 37 கோடியே 90 லட்சத்து 82 ஆயிரத்து 288 தொகைக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

மேலும், இந்த மக்கள் நீதிமன்றத்தில் கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த நிலையில், பல்வேறு கட்ட சமாதானப் பேச்சுவாா்த்தைக்கு பின், சனிக்கிழமை நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 17 தம்பதிகள் இணைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீரிஜா, சாா்பு நீதிமன்ற நீதிபதி ஆா்.உமா, மோட்டாா் வாகன விபத்து சிறப்பு நீதிபதி அருந்ததி, மாவட்ட முன்சீப் சுபாஷினி, குற்றவியல் நீதிமன்ற நடுவா்கள் ராதிகா, இளவரசி, வங்கி அலுவலா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

(திருத்தப்பட்டது)

திருவள்ளூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் இணைந்த தம்பதியருக்கான உத்தரவு நகலை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி ஜெ.செல்வநாதன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா் சரஸ்வதி உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com