தகவல் தொடர்பு சாதனங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும்: மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை
By DIN | Published On : 14th February 2019 06:41 AM | Last Updated : 14th February 2019 06:41 AM | அ+அ அ- |

தகவல் தொடர்பு சாதனங்களை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. ராஜேந்திரன் கூறினார்.
திருவள்ளூரை அடுத்த போந்தவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறையுடன் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் இணைந்து ஸ்மார்ட் வகுப்பறைக்கான தொடுதிரை மற்றும் கணினி உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பூண்டி வட்டாரக் கல்வி அலுவலர் வீரராகவன் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.ராஜேந்திரன் பங்கேற்று பேசியது:
மாணவர்களின் கற்றல் திறனை அதிகப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான பன்முக கற்றல் வகுப்பறைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறை, திருவள்ளூரில் செயல்பட்டு வரும் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் பல்வேறு அமைப்புடன் இணைந்து மாணவ, மாணவியரின் கற்றல் திறனுக்காக, இப்பள்ளிக்கு நவீன முறையில் தொலைத் தொடர்பு சாதனங்கள் உதவியுடன் கற்கும் வகையிலான பன்முக கற்றல் வகுப்பறையை ஏற்படுத்தியுள்ளன. இதை மாணவ, மாணவிகள் நல்ல முறையில் கற்பித்தலுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் கனடா குழந்தைகள் அமைப்பு பங்களிப்புடன் பன்முக கற்றலுக்கான புரொஜக்டர், அகன்ற திரை, கணிப்பொறிகள் மற்றும் நூலகத்துக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் குழந்தைகள் மதிப்பீடு அலுவலர் டாக்டர் புவனேஸ்வரி, திட்ட மேலாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.