26, 27-இல் ஆட்சிமொழி பயிலரங்கம்: அமைச்சர் க.பாண்டியராஜன் பங்கேற்கிறார்
By DIN | Published On : 15th February 2019 07:51 AM | Last Updated : 15th February 2019 07:51 AM | அ+அ அ- |

திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வரும் 26, 27 தேதிகளில் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் தமிழ் ஆட்சி மொழி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சிமொழி பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழாண்டுக்கான ஆட்சி மொழி பயிலரங்கமும், கருத்தரங்கமும் வரும் 26, 27ஆம் தேதிகளில் வி.எம் நகர், ஆர்.எம்.ஜெயின் பள்ளியின் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இரு தினங்களும் காலை 10 முதல் மாலை 5.45 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
27-ஆம் தேதி மாலையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரும், மாவட்டத்தின் அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்கவுள்ளனர். பயிலரங்கில் ஆட்சிமொழித் திட்டத்தின் இன்றியமையாமை, திட்டச் செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே சுருக்கொப்பம், கையொப்பமிடுவது உள்ளிட்டவை தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்கப்படவுள்ளது.