முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
அரசுப் பள்ளிக்கு ரூ.2 லட்சம் கல்விச்சீர் வழங்கிய பொதுமக்கள்
By DIN | Published On : 28th February 2019 05:52 AM | Last Updated : 28th February 2019 05:52 AM | அ+அ அ- |

திருவள்ளூர் அருகே மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், ரூ.2 லட்சம் மதிப்பிலான கல்விச்சீர் பொதுமக்கள் சார்பில் புதன்கிழமை வழங்கப்பட்டது.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த தண்டலம்-106 கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகளை கிராமங்களில் உள்ள பள்ளிகளிலும் பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான பொருள்களை அளிக்க முன்வந்தனர். அதன் அடிப்படையில் இப்பள்ளியின் கல்விக்குழு தலைவர் விமலா, மேலாண்மை கல்வியாளர் ஷோபனா ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் மடிக்கணினி, அமரும் இருக்கைகள், அச்சு இயந்திரம், அகன்ற திரை, நூலகத்துக்கு தேவையான புத்தகங்கள், புத்தக அலமாரி, காலணிகள் அலமாரி, படுக்கை விரிப்புகள், மேஜைகள், விளையாட்டு பொருள்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு அளித்தனர்.
கல்விச்சீர் கொண்டு வந்தவர்களை வட்டார கல்லூரி அலுவலர்கள் கிரிஜா, ரகுபதி, தலைமை ஆசிரியை ஹேட்ரூட் மற்றும் ஆசிரியைகள் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியை புவனேஷ்வரி மற்றும் கல்விக் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
திருத்தணியில்...
பள்ளிப்பட்டு வட்டம், மேளப்பூடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருத்தணி மாவட்டக் கல்வி அலுவலர் இ.எம்.லோகமணி தலைமை வகித்தார்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் எம்.வெங்கடேஸ்வரலு, பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை கே.எஸ்.கலைச்செல்வி வரவேற்றார்.
பிஎஸ்என்எல் முன்னாள் மேலாளர் கே.குமாரசாமி பங்கேற்று, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களை வாழ்த்திப் பேசினார். விழாவில் ஊர் பொதுமக்கள் சார்பில் ஏராளமான கல்வி உபகரணப் பொருள்கள் பள்ளிக்கு வழங்கப்பட்டன.
மேலும், கிராமத்தில் வசிக்கும் ஆர்.மோகன் என்பவர் ரூ. 30 ஆயிரம் மதிப்பில், பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகளை வழங்கினார்.
சென்னை துறைமுக பொதுக்கழக செயலர் ஆர்.மோகன், நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.