முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
மனைவி கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை
By DIN | Published On : 28th February 2019 04:06 AM | Last Updated : 28th February 2019 04:06 AM | அ+அ அ- |

திருவள்ளூர் அருகே மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவள்ளூர் அருகேயுள்ள வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (60). இவரது மனைவி சாந்தி (50). இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர்.
சாந்தி அப்பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். நடராஜனுக்கு குடிபழக்கம் உள்ளதால் அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்வாராம். கடந்த 2017 நவம்பர் 23-இல் அவர் பணம் கேட்டபோது சாந்தி மறுத்தாராம். இதனால் ஆத்திரம் அடைந்த நடராஜன், கத்தியால் குத்தியதில் சாந்தி பலத்த காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து மகன் சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில் கடம்பத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்தனர். இவ்வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் நடராஜன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிபதி செல்வநாதன் அவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதையடுத்து நடராஜன் புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ராம்குமார் ஆஜரானார்.