முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
மாதவரத்தில் கண்காணிப்பு கேமராக்கள்: காவல் ஆணையர் இயக்கி வைப்பு
By DIN | Published On : 28th February 2019 04:07 AM | Last Updated : 28th February 2019 04:07 AM | அ+அ அ- |

மாதவரம் எல்லைக்குள்பட்ட பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் செவ்வாய்க்கிழமை இயக்கி வைத்தார்.
சென்னையில் குற்றங்களைத் தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, மாதவரம் காவல் மாவட்டத்துக்குள்பட்ட மாதவரம், புழல், செங்குன்றம் பகுதிகளில் மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலை செங்குன்றம்-செம்பியம் சாலை, செங்குன்றம்-அம்பத்தூர் சாலை, மணலி 200 அடி சாலை மற்றும் பொன்னேரி சாலை ஆகிய பகுதிகளில் மாதவரம் போக்குவரத்துக் காவல் துறை சார்பிலும், மாதவரம் மாவட்ட சட்டம் ஒழுங்கு காவல் துறை சார்பிலும் 686 கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இவற்றை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர், போக்குவரத்துக் காவலருக்கு ஆடைகள், சுவாசக் கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
சென்னை கூடுதல் காவல் ஆணையர் தினகரன், சென்னை வடக்கு இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்கள் ரவளிபிரியா, கலைச்செல்வன், பகலவன், உதவி ஆணையர்கள் ராமலிங்கம், ரவி, உக்கிரபாண்டியன், வெங்கடேசன், பிரபாகரன் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.