மகிளா சக்தி கேந்திரா திட்டத்தில் பெண்களுக்கு பணி: ஜன.18-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 04th January 2019 04:32 AM | Last Updated : 04th January 2019 04:32 AM | அ+அ அ- |

மகிளா சக்தி கேந்திரா திட்டம் மூலம், மாவட்ட சமூக நல அலுவலகக் கட்டுப்பாட்டில் பணிபுரிய விரும்பும் பெண்கள் வரும் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட சமூக நலத் துறை கட்டுப்பாட்டில், மகிளா சக்தி கேந்திரா திட்டம் மூலம் மகளிர் நல அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகிய பணியிடங்களில் ஆள்சேர்ப்புக்கு பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மகளிர் நல அலுவலர் பணியிடத்துக்கு, சமூக அறிவியல் மற்றும் மனித நேயத்தில் முதுகலைப் பட்டம், சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது அவசியம். மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலப் புலமையும், கணினியில் அறிக்கையும் தயார் செய்ய வேண்டும்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்துக்கு, சமூக அறிவியல் மற்றும் மனித நேயம் அல்லது சமூகப் பணியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மாவட்டத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பிரச்னைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். கல்வித்திறன் குறித்த சான்றுகள் சுயசான்றொப்பமிட்ட நகல் மற்றும் முழு முகவரி எழுதிய அஞ்சல் உறையுடன் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக 2-ஆவது வளாகம், திருவள்ளூர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ ஜனவரி 18-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்கலாம்.