வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு
By DIN | Published On : 05th January 2019 02:56 AM | Last Updated : 05th January 2019 02:56 AM | அ+அ அ- |

பிரதமர் உஜ்வலா திட்டத்தின், கீழ் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறலாம் என பாரத் காஸ் நிறுவன சென்னை விற்பனை மேலாளர் வெங்கடசிவா ரெட்டி தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெறுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருத்தணியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாரத் காஸ் நிறுவன சென்னை விற்பனை மேலாளர் வெங்கடசிவா ரெட்டி கலந்து கொண்டு பேசியது:
உஜ்வலா திட்டத்தின் கீழ் இதுவரை ஆதிதிராவிடர், பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு, பெண்கள் பெயரில் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி வந்தோம். தற்போது அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கும் இத்திட்டம் மூலம் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது.
இதற்கு பயனாளிகள் தங்களது ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை பாரத் காஸ் முகவர்களிடம் காண்பித்து, இலவச இணைப்பைப் பெறலாம். ஏற்கெனவே இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு புதிய இணைப்பு வழங்கப்பட மாட்டாது. பெண்கள் பெயரில்தான் காஸ் இணைப்பு வழங்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 83 சதவீதம் பேர் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்புகளைப் பெற்றுள்ளனர். உஜ்வலா திட்டத்தால், 93 பேர் சதவீதம் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். மீதமுள்ள, 30 ஆயிரம் பேர் இன்னும் சமையல் எரிவாயு இணைப்பைப் பெறவில்லை.
அதற்காகவே, தற்போது அனைத்துப் பிரிவினருக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 66 முகவர்கள் மூலம், 93 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், தற்போது 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் வைத்திருந்தால், அதைக் கொடுத்து, 5 கிலோ சிலிண்டரை தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பாரத் காஸ் நிறுவன சென்னை விற்பனை மேலாளர் அங்கித் வர்மா, திருத்தணி பாரத் காஸ் முகவர்கள் சீனிவாசன், சேஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.