முதியோர் இல்லம், பள்ளிகளில் பொங்கல் பண்டிகை

திருவள்ளூர் அருகே உள்ள சேவாலயா முதியோர் இல்ல வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற

திருவள்ளூர் அருகே உள்ள சேவாலயா முதியோர் இல்ல வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் தமிழகப் பாரம்பரிய முறையில் உடை அணிந்து பங்கேற்று அமெரிக்க மாணவியர் அசத்தினர்.
திருவள்ளூர் அருகே கசுவா கிராமத்தில் செயல்படும் சேவாலயா முதியோர் இல்லத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 
இந்த ஆண்டும் இங்கு வெள்ளிக்கிழமை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வெளிநாட்டு மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்றனர்.  சேவாலயாவில் தன்னார்வலர்களாக பணியாற்றுவதற்காக அமெரிக்காவில் இருந்து பொறியியல் மாணவி ஸ்மிருதி (19), பிளஸ் 2 முடித்த செரீனா(17), கேத்ரின்(17), ஏடா(17) ஆகிய 4 மாணவியர் வந்துள்ளனர்.  
இவர்கள் தமிழர்கள் போல் பாரம்பரிய முறையில் உடை அணிந்து விழாவில் பங்கேற்று, பல்வேறு வண்ணம் பூசப்பட்ட பானைகளில் பொங்கல் வைத்தனர். அப்போது, "பொங்கலோ, பொங்கல்' எனக் கூறி, குலவைச் சத்தமிட்டனர். பொங்கல்  தயாரானதும் அதை அங்கிருந்த முதியோர்களுக்குப் பரிமாறியதோடு, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர். இந்த நிகழ்வு, பெற்ற மகன், மகளையும், உறவினர்களையும் பிரிந்து வந்து தங்கியிருக்கும் தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக முதியோர்கள் தெரிவித்தனர்.
விழாவில் சேவாலயா அறக்கட்டளை நிர்வாகி முரளிதரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் மற்றும் சேவாலயா பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
தலாக்காஞ்சேரியில்...
திருவள்ளூரில் தனியார் பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
திருவள்ளூர் அருகேயுள்ள தலாக்காஞ்சேரியில் ஏபிஎஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருடன் பெற்றோர் திரளாகப் பங்கேற்றனர். அவர்கள் வண்ணம் பூசப்பட்ட மண் பானைகளில் மஞ்சள் செடியைக் கட்டி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
பொங்கல் விழாவில் பங்கேற்ற பெற்றோருக்கு வண்ணக் கோலப் போட்டி, ஓவியம், சமையல் கலை, மங்கள ஆரத்தித் தட்டு அலங்காரம், குழு நடனம், நாட்டுப்புற நடனம், கைவினை வேலைப்பாடு, பல்லாங்குழி, கரும்பு சுவைத்தல், சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், பள்ளி நிர்வாகிகள் ரமேஷ்சுப்பிரமணியம், பிரேமா சுப்பிரமணியம், பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்கள் பாபு, தொல்காப்பியன், பள்ளி முதல்வர் சாருலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்மிடிப்பூண்டியில்....
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜே.எஸ். பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
டி.ஜே.எஸ். பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளி தாளாளர் ஜி.தமிழரசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சுகாதா தாஸ் வரவேற்றார். விழாவில் அந்தந்த வகுப்புகள் சார்பாக பொங்கல் பானை வடிவமைப்பு போட்டி நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக செல்காம் தகவல் தொழில்நுட்ப நிறுவனத் தலைவர் பாலாஜி பங்கேற்றார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு உரியடிப்  போட்டி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய போட்டிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, பொங்கல் வைத்து, சூரிய வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டி.ஜே.எஸ். கல்விக் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். பள்ளி நிர்வாக அலுவலர்  ஏழுமலை நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com